நெல்லை, தென்காசியில் கன மழை- நிரம்பி வழியும் அணைகள் - குற்றால அருவிகளில் வெள்ளம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி: மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக குற்றாலம் மெயின் பேரருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குற்றாலத்தின் பிரதான அருவியான பேரருவியில் காட்டாற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் நெல்லை மாவட்டத்தில் அவ்வப்போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மற்ற பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. நெல்லை, பாளையங்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய சாரல் மழை இன்று காலை வரை இடைவிடாது விட்டு விட்டு பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் 41 மில்லி மீட்டர் மழை பெய்தது. தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணை பகுதியில் 72 மில்லி மீட்டர் மழை பெய்தது.
நெல்லை, தென்காசி மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. மழை காரணமாக பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 9,564 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 467 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்த பாபநாசம் நீர்மட்டம் இன்றும் அதிகரித்து உள்ளது. நேற்று 119.60 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து இன்று காலை 129.15 அடியாக உயர்ந்தது.
பாபநாசம் அணையின் மொத்த கொள்ளளவு 143 அடியாகும். அணை நிரம்ப இன்னும் 14 அடி மட்டுமே தேவை. சேர்வலாறு அணை நீர்மட்டம் 135.30 அடியாக இருந்தது. ஒரே நாளில் 16 அடி உயர்ந்து இன்று காலை 151.41 அடியாக உள்ளது. இந்த அணை நிரம்ப இன்னும் 5 அடி தண்ணீர் மட்டுமே தேவை.
மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 3,595 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து இன்று காலை வினாடிக்கு 335 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து இன்று காலை 84.10 அடியாக உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் சிறிய அணையான குண்டாறு அணையில் நேற்று முன்தினம் 30 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 33.25 அடியாக உயர்ந்தது. இன்று மேலும் அதிகரித்து அணையின் முழு கொள்ளளவான 36.10 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. இதில் ஏராளமானோர் தடை உத்தரவையும் மீறி குளித்து வருகின்றனர்.
கடனாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து இன்று 72 அடியாகவும், ராமநதி நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்து இன்று 60 அடியாகவும், கருப்பாநதி நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 56.45 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று 27.25 அடியாகவும் உள்ளது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 42.49 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.53 அடியாகவும் தொடர்ந்து உள்ளது.
செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணை பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இன்று காலை வரை ஒரு நாளில் அதிகபட்சமாக 72 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று 54 அடியாக இருந்த அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 26 அடி உயர்ந்து இன்று காலை 80 அடியாக உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் இரவு முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் பேரருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குற்றாலத்தின் பிரதான அருவியான பேரருவியில் காட்டாற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக குற்றாலத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை சீசன் காலமாகும். அப்போது அருவிகளில் தண்ணீர் விழுவதை ரசிக்கவும் குளிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தருவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா காலமாக சீசன் காலத்தில் குற்றால அருவிகளில் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. தடை உத்தரவு நீக்கப்பட்ட பின்னரும் மழை பெய்து அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டது. பயணிகள் குற்றால அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
நடப்பாண்டு சீசன் காலம் ஆரம்பிக்கும் முன்பாகவே குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. குற்றாலம் பேரருவியின் உள்ள பாதுகாப்பு வளைவை கடந்து வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகிறது. தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையிலும் குற்றாலம் அருவிக்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.












Click it and Unblock the Notifications