சபாநாயகர் படத்துடன் ஓட்டு கேட்ட திமுக வேட்பாளர்கள்.. புகார் அளிக்க சென்ற இன்பதுரை தடுத்து நிறுத்தம்
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சபாநாயகர் அப்பாவு புகைப்படத்தை போட்டு திமுக உள்ளாட்சி மன்ற வேட்பாளர்கள் ஓட்டு சேகரித்ததாக முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக சீனியர் தலைவர்களில் ஒருவருமான இன்பதுரை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, நெல்லையில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று அவர் புகார் அளிக்க சென்றபோது மாவட்ட ஆட்சியர் இல்லை என்று கூறி வாசலில் வைத்து புகார் மனுவை வாங்கியதால் பரபரப்பு நிலவியது.
கலெக்டர் அலுவலகத்தில் வைத்து காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தபோது இன்பதுரை பேசுகையில், நான் ஒரு மூத்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.. முன்னாள் எம்எல்ஏ.. ஆனால் கலெக்டரை தற்போது நேரில் சந்திக்க முடியாது என்கிறார்கள்.

புகார் அளிப்பது எப்படி?
தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருக்கிறது என்கிறார் கள். எனக்கே இந்த நிலை என்றால் தேர்தல் முறைகேடு நடந்தால் ஒரு சாதாரண மனிதன் எப்படி புகார் அளிக்க முடியும்? ராதாபுரம் தொகுதியில் தேர்தல் கருத்துக்கணிப்பு ஒன்றை நேற்று இரவு வெளியிட்டார்கள். இது தேர்தல் நடத்த விதிமுறைகளுக்கு எதிரானது.

வாசலில் தடுத்து நிறுத்தம்
இதைப் பற்றி புகார் அளிக்க தேர்தல் பார்வையாளராக ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் அவர் யார் என்பது எனக்கே தெரியவில்லை. வாசலில் வைத்து தடுத்து நிறுத்துவது என்பது அரசியல் அமைப்பு சரிவடைந்து விட்டது என்பதற்கான அறிகுறி. தமிழகத்தில், அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்டிருக்கிறது என்று நாங்கள் குற்றம்சாட்டுகிறோம்.

சாலையில் வைத்து அரசு நடக்கிறதா?
நான் ஒரு வழக்கறிஞர், புகார்தாரர் நான்தான். ஆனால் என்னை வாசலில் நிறுத்தி வைத்து மனு வாங்குவீர்களா? இந்த அரசுக்கு அலுவலகமே இல்லையா? சாலையில் வைத்துதான் அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறதா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார் இன்பதுரை.

பிரதிநிதி நியமனம்
அப்போது ஆர்டிஓ தன்னிடம் மனுவை கொடுக்குமாறும், தான் கலெக்டரிடம் சேர்த்து விடுவதாகவும் தெரிவித்தார். இது தேர்தல் காலம் என்பதால் உங்களை கலெக்டர் சந்திக்க முடியவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார். ஆனால் இன்பதுரை அந்த விளக்கத்தை ஏற்கவில்லை. அரசு அதிகாரிகள் அவசர தேவைக்காக 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். ஒருவேளை அவர் தேர்தல் பணிக்காக வேறெங்காவது சென்று விட்டால் ஒரு பிரதிநிதியை நியமனம் செய்து விட்டு சென்றிருக்க வேண்டும் என்று தெரிவித்த இன்பதுரை அந்த மனுவை அதிகாரியிடம் வழங்கினார்.

ஆளுநரிடம் புகார்
அந்த மனுவில் இன்பதுரை சில புகார்களை தெரிவித்துள்ளார். சபாநாயகராக இருக்கும் அப்பாவு படத்தைப் பயன்படுத்தி திமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரித்துள்ளனர் , வழிபாட்டு தலத்தில் வாக்கு கேட்க கூடாது ஆனால் திமுக வேட்பாளர்கள் அதை செய்து உள்ளனர். எனவே இரு இடங்களில் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று மனுவில், கேட்டு உள்ளேன். தவறு நடைபெற்றால் நீதிமன்றத்திற்கு செல்லலாம், ஆனால், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விட்டது. இதற்கு மேலும் நீங்கள் பணியை ஒழுங்காக செய்யாவிட்டால் அரசியல் சாசன பாதுகாவலராக இருப்பவர் ஆளுநர். அவரிடம்தான் புகாரை கொண்டு செல்ல வேண்டியிருக்கும். ஏனென்றால் தேர்தல் ஆணையம் என்பது இயங்கவில்லை. இவ்வாறு இன்பதுரை குற்றம்சாட்டினார். இதனால் நெல்லை கலெக்டர் ஆபீசில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications