மாஞ்சோலைக்கு விடிவு கிடைக்குமா? அரசின் 'டான்டீ’ நிறுவனத்திற்கு பறந்த கோரிக்கை.. கிடைத்த பதில் என்ன?
நெல்லை: மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கி, அவர்களை மலைப் பகுதியில் இருந்து காலி செய்யுமாறு எஸ்டேட் நிர்வாகம் கூறி வரும் நிலையில், நெல்லையை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன், தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகமான 'டேன் டீ' நிர்வாக இயக்குனருக்கு கடிதம் எழுதி உள்ளார். இதற்கு தமிழ்நாடு தேயிலை தோட்டத்தின் நிர்வாக இயக்குனர் பதில் அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை அமைந்துள்ளது. மணிமுத்தாறு அணையிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் 3500 அடி உயரத்தில் இந்த மாஞ்சோலை வனப்பகுதி அமைந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இந்த வனப்பகுதி சிங்கம்பட்டி ஜமீன்தாரின் கட்டுப்பாட்டில் இருந்தது.

அப்போது மும்பையை சேர்ந்த தி பாம்பே டிரேடிங் கார்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்திற்கு 1929 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை சுமார் 8000 ஏக்கர் பரப்பு கொண்ட மாஞ்சோலை வனப்பகுதியை ஜமீன் குத்தகைக்கு கொடுத்தார். இதையடுத்து காபி, தேயிலை, மிளகு, ஏலக்காய் போன்ற பணப் பயிர்கள் பயிரிட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்திலிருந்து கூலி வேலைகளுக்கு ஆட்கள் அழைத்து வரப்பட்டனர்.
இவர்களால் உருவானது தான் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியாகும். மாஞ்சோலை மட்டுமில்லாமல் அதற்கு மேல் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரவெட்டி என மொத்தம் ஐந்து இடங்களில் தேயிலை எஸ்டேட் அமைத்தது. மாஞ்சோலை தோட்டத்திற்கான 99 ஆண்டுகள் தனியார் நிறுவனத்தின் குத்தகை வருகிற 2028-ம் ஆண்டுடன் முடிகிறது.
இதையடுத்து தமிழக அரசின் வனத்துறை மாஞ்சோலை தேயிலை தோட்டம், அதை சார்ந்த மலை காடுகளை மீண்டும் கையகப்படுத்த அரசாணை பிறப்பித்து அதற்கான செயல்முறைகள் நடைபெற்று வருகிறது. மேலும் தனியார் நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களுக்கும் விருப்ப ஓய்வு வழங்கி, அவர்கள் மலைப்பகுதியில் இருந்து காலி செய்யுமாறு கூறி வருகிறது.
தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை முடிவு செய்த பிறகுதான் அவர்களை மாஞ்சோலை பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதற்கிடையே, நெல்லையை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன், தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகமான 'டேன் டீ' நிர்வாக இயக்குனருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் நெல்லை மாவட்டத்தில் மாஞ்சோலை உள்ளிட்ட 5 தேயிலை தோட்டங்களை தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் எடுத்து நடத்துவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும்.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக 1968-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட திட்டத்தை முதன்முதலாக குன்னூர், கோத்தகிரி, கூடலூர், வால்பாறை ஆகிய பகுதிகளில் செயல்படுத்தியது. அதன்பிறகு 1976 ஆம் ஆண்டு இந்த திட்டம் கார்ப்பரேட் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் என மறுபெயரிடப்பட்டு சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்களுடன், 6 நவீன தொழிற்சாலைகளுடன் இயங்கி வருகிறது.
புலம் பெயர்ந்து வந்த இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக உருவான தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்திடம் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி ஆகிய 5 இடங்களில் உள்ள தேயிலை தோட்டங்களையும் வனத்துறை ஒப்படைக்கும் பட்சத்தில் தேயிலை தோட்டங்களுக்கும், 700 தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் மறுவாழ்வு கிடைக்கும்' எனக் கூறியிருந்தார்.
இதற்கு தமிழ்நாடு தேயிலை தோட்டத்தின் நிர்வாக இயக்குனர் அளித்த பதிலில், "மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை எடுத்து நடத்துவது என்ற கோரிக்கை தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது இல்லை" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications