சிறுபான்மை இயக்கங்களை அடக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு என்ஐஏ சோதனை நடக்கிறது.. நெல்லை முபாரக் தடதட!
நெல்லை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று என்.ஐ.ஏ ரெய்டு நடைபெற்று வரும் நிலையில், "சிறுபான்மை இயக்கங்களை அடக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு என்.ஐ.ஏ சோதனை நடக்கிறது. திருபுவனம் ராமலிங்கம் கொலைக்கும் எஸ்டிபிஐ கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை." என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
எஸ்டிபிஐ கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நெல்லை முபாரக், நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர். மேலப்பாளையத்தில் உள்ள நெல்லை முபாரக் இல்லத்தில் இன்று அதிகாலையில் தேசிய புலனாய்வு முகமை ( என்ஐஏ) அதிகாரிகள் திடீரென சோதனைக்கு வந்தனர். காவல்துறை உதவியுடன் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீரென நெல்லை முபாரக் வீட்டில் சோதனைக்கு வந்த தகவல் அறிந்து, எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு மதமாற்றத்தில் ஈடுபட்டதைக் கண்டித்த பாமக முன்னாள் நகரச் செயலாளர் திருப்புவனம் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது. இந்த கொலையில் எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ சந்தேகிக்கிறது.
திருப்புவம் ராமலிங்கம் கொலைக்கு பின்னணியில் மதமாற்றம் ரீதியான பல்வேறு சர்ச்சைகள் உள்ளன. திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளைப் பிடிப்பது தொடர்பாக இன்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், என்.ஐ.ஏ ரெய்டுக்கு மத்தியில் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த நெல்லை முபாரக், "சிறுபான்மை இயக்கங்களை அடக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு என்.ஐ.ஏ சோதனை நடக்கிறது. திருபுவனம் ராமலிங்கம் கொலைக்கும் எஸ்டிபிஐ கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையை பிரதமர் மோடி விசாரணை என்றுதான் சொல்ல வேண்டும்." எனத் தெரிவித்தார்.
முன்னதாக, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது," எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வீடு உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் என்.ஐ.ஏ சோதனையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது அரசியல் பழிவாங்கும் மற்றும் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் மத்திய அரசின் ஏவல் நடவடிக்கை. கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் நல அரசியலை முன்னெடுத்துவரும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தேர்தல் அரசியல், போராட்ட அரசியல் மட்டுமின்றி பேரழிவு காலங்களிலும் மக்கள் நலனுக்காக களத்தில் முன்னணியில் நின்று போராடிக்கொண்டிருக்கிறது.
எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும், மக்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் ஒன்றிய அரசு தனது ஏவல்துறையான என்.ஐ.ஏ. மூலம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நாங்கள் குற்றம் சாட்டுகின்றோம்" என அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார். மேலும், என்.ஐ.ஏ சோதனையைக் கண்டித்து நெல்லை முபாரக் வீடு முன்பாக எஸ்டிபிஐ நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications