சமூகங்கள் இடையேயான பிரச்சனையால் நெல்லை மாவட்ட வளர்ச்சியே பாதிப்புக்குள்ளாகியுள்ளது - கலெக்டர் கவலை
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு சமூகங்கள் இடையே ஏற்படும் பிரச்சனைகளால் மாவட்டத்தின் வளர்ச்சி பொருளாதாரம், வணிகம் பொதுமக்களின் வாழ்வாதாரம் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது. இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதால் அவர்களது குடும்பம் நிலை குலைந்து விடுகிறது. தவறான பாதையில் செல்லும் இளைஞர்களிடம் அரசியல் இயக்கங்கள் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என என அனைத்து கட்சி கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கூறினார்.
உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் போராட்டம் பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகள் நடத்துவதற்கான இடம் தேர்ந்தெடுப்பது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசியல் இயக்கங்கள், அமைப்புகள் போன்றவற்றின் நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாநகர காவல் துணை ஆணையாளர் கோட்டாட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் உள்ளிட்டவைகள் நடத்துவதற்கான இடங்கள் தேர்ந்தெடுப்பது, அனுமதிக்கப்படாத இடங்களில் நிகழ்வுகளை நடத்துவது சுவரொட்டிகள் ஒட்டுவது பதாகைகளை தவிர்ப்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து தரப்பினர் இடையேயும் நல்லிணக்கமான சூழல் நிலவுவதை உறுதி செய்திட அனைத்து அரசியல் இயக்கங்கள் அமைப்புகள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. சமூக வலைதளங்களில் பொது அமைதியை குலைக்கும் வகையில் பதிவுகள் மேற்கொள்வதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த நடவடிக்கைகளும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும் நெல்லை மாவட்டத்தில் இரு சமூகங்கள் இடையே பூசல் ஏற்படுத்தும் செயல்களால் மாவட்டத்தின் வளர்ச்சி பொருளாதார மேம்பாடு, வணிகம் பொதுமக்களின் வாழ்வாதாரம் என அனைத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை தவிர்க்க முடியாத நிலை உருவாகி வருகிறது. அனைத்து இயக்கங்களும் பொதுமக்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கிட அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டது.
மேலும் போக்குவரத்திற்கு இடையூறு இன்றியும் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாமலும் ஜனநாயக முறைப்படி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் போராட்டம் ஆகிய நிகழ்வுகளை நடத்த அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அரசியல் இயக்கங்கள் பின்பற்ற வேண்டும் . பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்த்திட அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அரசு மற்றும் அரசு சார்ந்த கட்டிடங்கள் சாலை மைய தடுப்புகள் போன்ற இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி சுவரொட்டிகள் ஒட்டும் நபர்கள் மற்றும் அச்சகங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். மாவட்டத்தில் கடந்த ஆண்டில் தீவிர குற்றங்களில் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு காவல்துறை எடுத்த தீவிர நடவடிக்கை மற்றும் பல்வேறு அமைப்புகள் பொதுமக்கள் ஒத்துழைப்புமே முக்கிய காரணம். இனிவரும் காலங்களில் குற்ற செயல்களை மேலும் குறைத்திட அனைத்து தரப்பினரிடையே நல்லிணக்கமான சூழ்நிலை தொடர்வதை உறுதி செய்திட அனைத்து அரசியல் கட்சிகள் அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. சமூக வலைதளங்களில் ஆர்வம் மிகுதியால் தவறான வழிகாட்டுதல்களால் சில இளைஞர்கள் சமூக பூசல்களை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை செய்து வருகின்றனர். அனைத்து இயக்கங்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை கடுமையான முறையில் கண்டிக்க வேண்டும்.
சமூகங்களிடையே பூசல்களை ஏற்படுத்தும் செயல்களால் மாவட்டத்தின் வளர்ச்சி பாதிப்பு அடைவதுடன் குற்றங்களில் தெரிந்தோ, தெரியாமலோ ஈடுபடும் நபர்களின் குடும்பமும் நிலை குலைந்து விடுகிறது என்பதை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவுரை வழங்கினார்.












Click it and Unblock the Notifications