அறியாத கிராமத்தின் அடையாளம்! புலி உலவும் காடு டூ கல்லூரிக்கு பழங்குடி மாணவி! நெகிழ்ச்சியில் நெல்லை
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உலா வரும் யாரும் அறிந்திடாத இஞ்சிக்குழி பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமத்தில் இருந்து அபிநயா என்ற மாணவி பல்வேறு தடைகளை தாண்டி கல்லூரி படிப்பில் சேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
Recommended Video
திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு தெரியாத ஊர் இஞ்சிக்குழி. ஏனென்றால் இந்த ஊர் பாபநாசம் - காரையாறு அணையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அடர் வனத்துக்குள் அமைந்துள்ளது.
வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ள இந்த அழகான ஊரில் 'காணி' பழங்குடியினத்தை சேர்ந்த எட்டு குடும்பம் மட்டுமே வசிக்கிறது. அதாவது மொத்தம் 24 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

கடைசி வரை கனவாகவே..
இந்த கிராம மக்கள் வாழை, கிழங்கு உள்ளிட்டவற்றை விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். நவநாகரிக உலகத்தில் நமக்கு கிடைக்கும் எந்த வசதியும் இஞ்சிக்குழி கிராமத்தில் இல்லை. ஏதேனும் அவசர தேவை எனில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவை கடந்து காரையாறு வந்து செல்ல வேண்டும். இதனால் அடிப்படை வசதிகள் குறிப்பாக கல்வி கற்க வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. இதனால் நகரத்து மக்களைப்போன்று படித்து சாதிக்க வேண்டும் எனும் கனவு பலருக்கும் கனவாகவே இருந்தது.

வனப்பகுதிகள் நிறைந்த கிராமம்
இதற்கு பல காரணங்களை கூறலாம். அதாவது வனப்பகுதிக்கு நடுவே அமைதியான மற்றும் அழகாக அமைந்துள்ள இந்த ஊரை சுற்றி ஆபத்துகளும் சூழ்ந்துள்ளன. அதாவது புலி, சிறுத்தை, யானை என வனவிலங்குகள் ஊரை சுற்றி உலா வரும் என்றால் அச்சம் இருக்கத்தானே செய்யும். இதுதவிர தொலைதொடர்பு உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாதது இன்னொரு காரணமாகும். இதனால் கல்வி என்பது காணி பழங்குடியின மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

12 வரை படித்த மாணவி
இந்நிலையில் தான் இஞ்சிக்குழி கிராமத்தை சேர்ந்த அய்யப்பன்-மல்லிகா தம்பதி தங்களின் மகள் அபிநயாவை படிக்க வைக்க விரும்பினர். இதனால் அபிநயாவை அவரது பெற்றோர் திருநெல்வேலியில் தங்கி படிக்க வைத்தனர். அபிநயா ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை படித்து பாஸ் செய்தார். இஞ்சிக்குழி ஊரை பொறுத்தமட்டில் யாருக்கும் கல்வி கிடைக்காத நிலையில் அபிநயா தனது பெற்றோரின் ஆர்வம், உதவியால் 12 வரை படித்தார்.

தடைப்பட்ட கல்லூரி படிப்பு
அதன்பிறகும் அபிநயாவை படிக்க வைக்க அவரது குடும்பத்தினர் விரும்பினர். இதையடுத்து வழக்கறிஞராக விரும்பிய அபிநயா கடந்த ஆண்டு பெற்றோர் உதவியுடன் திருநெல்வேலி சட்டக்கல்லூரியில் விண்ணப்பம் செய்தார். இணையதள வசதி குறைபாடு, அட்மிஷன் விவகாரத்தை அறிந்து கொள்ள முடியாமல் அவரது படிப்பு தடைப்பட்டது. இருப்பினும் அபிநயா மற்றும் அவரது பெற்றோர் மனம் தளரவில்லை. தொடர்ந்து போராடினர்.

கல்லூரியில் அபிநயாவுக்கு சீட்
அதன்பிறகும் மீண்டும் பல்வேறு கல்லூரிகளில் விண்ணப்பம் செய்தார். இந்நிலையில் தான் தடைகளை தாண்டி அபிநயாவுக்கு கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது. அதாவது அபிநயாவுக்கு நெல்லை ராணி அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. வரலாறு படிக்க இடம் கிடைத்துள்ளது. இதன்மூலம் இஞ்சிக்குழி கிராமத்தில் இருந்து முதல் முதலாக கல்லூரி பயிலும் பெண் என்ற பெயரை அவர் எடுத்துள்ளார். அதோடு சிறுவயது முதலே மகளை பட்டதாரியாக பார்க்க வேண்டும் என்ற பெற்றோரின் கனவு உள்ளது.

பிரச்சனையை வென்றது எப்படி?
அபிநயாவுக்கு கல்லூரில் இடம் கிடைத்தாலும் அதன் பின்னணியில் கடும் போராட்டம் உள்ளது. அதாவது கடந்த முறையை போல் இந்த முறை இண்டர்நெட் வசதி, சேர்க்கை தொடர்பான விபரங்கள் தெரிவதில் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே மகளுக்காக அய்யப்பன் தனது குடும்பத்துடன் கடந்த மூன்று மாதத்துக்கு முன்பே இஞ்சிக்குழியில் இருந்து இடம்பெயர்ந்தார். இதையடுத்து அவர்கள் காரையாறு அணை அருகே சின்னமைலார் காணிக்குடியிருப்பில் வசிக்க துவங்கினார். அங்கும் செல்போன் சிக்னல் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து தினமும் செல்போன் சிக்னல் கிடைக்கும் இடத்துக்கு அவர் செல்வார்.

அபிநயா கூறுவது என்ன?
இதுகுறித்து அபிநயா கூறும்போது, 'எங்கள் ஊரில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. என்னை படிக்க வைக்க பெற்றோர் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். நான் நன்றாக படித்து அவர்களுக்கு பெருமை சேர்ப்பேன்' என்றார். அபிநயாவின் தாய் மல்லிகா கூறுகையில், 'எங்கள் ஊரில் இருந்து பள்ளிக்கு சென்று வரமுடியாது என்பதால் சின்ன வயதில் இருந்தே எங்களது மகளை பிரிந்து வாழ்கிறோம். அவளை பார்க்க முடியாமல் பலமுறை அழுதுள்ளேன்' என்றார்.












Click it and Unblock the Notifications