வேற லெவலில் ரெடியான நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட்..உதயநிதி திறந்து வைத்தார்.. இவ்ளோ வசதிகள் இருக்கா?
நெல்லை: நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 6 ஆண்டுகளுக்கு பிறகு ஜங்ஷன் பேருந்து நிலையம் இன்று பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து நெல்லை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லையின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையம். தாமிரபரணி ஆறு, இருட்டுக்கடை வரிசையில் நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையத்திற்கும் தனி அடையாளம் உண்டு. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் ரயில்களில் சொந்த ஊருக்கு வருவது என்றால் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் ஜங்சன் பேருந்து நிலையமே அன்போடு பயணிகளை வரவேற்கும்.

நெல்லையின் பிரதான ரயில் நிலையமாகவும் இதுவே விளங்கி வந்தது. அதன்பிறகு பயணிகள் நெருக்கடி காரணமாக 2003 ஆம் ஆண்டு வேய்ந்தான் குளத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஜங்சன் பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம், தென்காசி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நெல்லை நகர்புற பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக பேருந்துகள் இயக்கப்படும். இதனால் எப்போதும் பிசியாகவே இந்த பேருந்து நிலையம் இருக்கும்.
உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்: இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் இடிக்கப்பட்டது. மாநகராட்சியின் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் புதிய நவீன பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கியது. கட்டுமான பணி கடந்த 2019 ஆம் தொடங்கியது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.85 கோடியில் புதிதாக ஜங்சன் பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கியது. கொரோனா காலக்கட்டம் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக கட்டுமான பணிகள் தாமதம் அடைந்தது.
இதனால் ஜங்ஷன் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முடிந்து எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் நிலவியது. இந்த நிலையில், தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து இன்று ஜங்ஷன் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.
நெல்லை மக்கள் ஹேப்பி: 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பழைய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து பயணிகளும் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் நெல்லையில், பல்வேறு திட்டங்களையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ரூ.570 கோடி மதிப்பில் மேலும் பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதேபோல் ரூ.165 கோடியில் உள்விளையாட்டு அரங்கம், வணிக வளாகம், பன்னடுக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்டவற்றையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
என்னென்ன வசதிகள்: நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையம் ரூ.79 கோடி மதிப்பில் கட்டப்படுள்ளது. 4 மாடி கட்டங்களை கொண்டதாக இந்த பேருந்து நிலையத்தில் கடைகள், தரைதளத்திற்கு கீழே பைக்குகள், கார்கள் உள்ளிட்டவை நிறுத்தும் வசதி என பல்வேறு வசதிகள் உள்ளன. பேருந்து நிலையத்தின் முன்பகுதியில் நம் நெல்லை நம் பெருமை என்ற வாசகத்துடன் அலங்கார செடிகளும் வைக்கப்பட்டுள்ளன. சிறிய பூங்காவும் ஆமிக்கப்பட்டுள்ளது. பயணிகளை கவரும் விதமாக பல வண்ணங்களில் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது ஜங்ஷன் பேருந்து நிலையம்.












Click it and Unblock the Notifications