கன்னியாகுமரியில்.. விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை இடையே தொங்கு பாலம் - அமைச்சர் ஏ.வ.வேலு
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணிகள் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மற்றும் நெடுஞ்சாலை துறையின் முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் , மேற்கண்ட மாவட்டங்களின் கலெக்டர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தங்கள் பகுதியில் நடைபெற்று வரும் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை துறை பணிகள் குறித்தும் தேவைப்படும் பணிகள் குறித்தும் அமைச்சரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்

நெடுஞ்சாலைகள் தரம் உயர்வு
இதனைத் தொடர்ந்து நிருபர்களை சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு கூறியதாவது:- தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு 2000 கி.மீ கிராம சாலைகள் மாநில நெடுஞ்சாலை தரத்துக்கு உயர்த்த பட உள்ளது , தென்காசி பகுதியில் 6 கி.மீ, அம்பாசமுத்திரம் பகுதியில் 6 கிமீ, சங்கரன்கோவில் பகுதியில் 7 கிமீ நகர்ப்புற புறவழி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . நகர்பகுதி புறவழி சாலைகளை அமைக்க அரசு தனிகவனம் செலுத்திவருகிறது.

பராமரிப்பு பணிகள்
தற்போது உள்ள நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு தொழிற்சாலை சி.எஸ்.ஆர் பண்டுகளை உபயோகபடுத்தி நெடுஞ்சாலைகளில் இருபுறமும் உள்ள மரங்களை பராமரிப்பு மற்றும் நடவு செய்யும் பணிகளில் ஈடுபட தொழில்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசப்பட்டுள்ளது. நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டத்தில் மொத்தமாக ரூ.819.13 கோடி செலவில் நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றன.

விவேகானந்தர் பாறை
பல்வேறு நாடுகளிலிருந்து வரும் சர்வதேச மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் தொங்கு பாலம் அமைக்க முதற்கட்ட பணிகள் நடந்துவருகிறது. தனிமனித பொருளாதரம் முன்னேற நெடுஞ்சாலைகள் மிகமுக்கியமாக திகழ்கிறது.நெடுஞ்சாலை துறைக்கு முக்கியத்துவம் அளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது

5 மண்டலமாக பிரிக்கப்படும்
நெடுஞ்சாலை துறைகளின் பணிகளை விரைவு படுத்தி மேற்கொள்ள தமிழகத்தை 5 மண்டல பகுதிகளாக பிரித்து ஒரு மண்டலத்திற்கு ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.அதற்கான அரசாணையை முதல்வர் விரைவில் வெளியிடுவார். தமிழ்நாடு முழுவதும் ரயில்வே துறையின் பணிகளில் தொய்வு காரணமாக 58 ரயில்வே பாலங்கள் முடிவு பெறாமல் இருக்கிறது, திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையான தனி நடை பாதை அமைக்கும் கோரிக்கை குறித்து அரசு சிறப்பு கவனம் செலுத்தும். இவ்வாறு எ.வ. வேலு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications