மனைவிக்கு வேறு மாப்பிள்ளை.. திருநெல்வேலியில் திருமண நாளில் மாடியில் இருந்து குதித்த எலக்ட்ரீசியன்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே திருமண நாளில் வீட்டு மாடியில் இருந்து குதித்து எலக்ட்ரீசியன் இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரிந்து சென்ற மனைவிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்த காரணத்தால் இந்த விபரீத முடிவினைஅவர் எடுத்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் ஜோசப் ஜெரோம் என்ற கண்ணன் (வயது 38), இவர் எலக்ட்ரீசியன் ஆவார். ஜோசப் ஜெரோமுக்கு வள்ளியூர் அருகே ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்து வந்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கல்யாணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

இவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் கடந்த ஒன்றரை வருடம் முன்பு அவரது மனைவி பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஒருகட்டத்தில் அவரது மனைவிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனராம்.
இதை அறிந்த ஜோசப் ஜெரோம் கடந்த சில நாட்களாக மனமுடைந்து போயிருக்கிறார். அவர் நேற்று காலையில் வீட்டின் மாடியில் இருந்து குதித்தார். சத்தம் கேட்டு அவரது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அங்கு ஜோசப் ஜெரோம் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜோசப் ஜெரோம் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.
இதுகுறித்து வள்ளியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எலக்ட்ரீசியன் ஜோசப் ஜெரோம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட ஜோசப் ஜெரோமுக்கு நேற்று தான் திருமணம் நாள் ஆகும். திருமண நாளில் மாடியில் இருந்து குதித்து எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருநெல்வேலி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications