சட்டென போட்டோவை பிடுங்கி காட்டிய எடப்பாடி.. உற்று பார்த்த பொதுமக்கள்! அதிமுக பிரச்சாரத்தில் பரபரப்பு
திருவள்ளூர்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரம் செய்தார். திமுகவை கடுமையாக விமர்சித்த அவர், கடந்த 10 ஆண்டுகளாகவே எஞ்சின் இல்லாமல் சிரமப்படும் கார் போல திமுக திணறி வருவதாகச் சாடினார். கூட்டணி என்ற லாரி தான் திமுகவை இழுத்துச் செல்வதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், பேசும்போதே அவர் போட்டோ ஒன்றை வாங்கி காட்டியும் திமுகவை ஆவேசமாக சாடினார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு மார்ச்- ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்குச் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை.. இன்னொரு பக்கம் பிரச்சாரம் என்றே எல்லாக் கட்சிகளும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுக்க தொகுதி வாரியாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி
"மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்!" என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி கும்மிடிப்பூண்டியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுகவை என்ஜின் இல்லாத கார் என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, அந்த இன்ஜின் இல்லாத காரை 10 ஆண்டுகளாகக் கூட்டணி என்ற லாரி தான் இழுத்துச் செல்கிறது என்று சாடினார்.
இப்போது திமுக கூட்டணி என்ற லாரி மக்கர் செய்ய ஆரம்பித்துள்ளது என்ற எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணியில் புகைச்சல் கிளம்பிவிட்டது என்றும் இந்தக் கூட்டணி நிலைக்குமா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துவிட்டது என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.
திமுக- பாஜக
அவர் மேலும் பேசுகையில், "எப்போது பார்த்தாலும் மதவாதம்.. மதவாதம் எனப் பேசி வருகிறார்கள்.. எங்களைப் பற்றிப் பேசுவதற்கு ஒன்றும் கிடையாது.. இதன் காரணமாகக் கூட்டணிக் கட்சியைப் பற்றிப் பேசி வருகிறார்கள் ஸ்டாலினிடம் நான் கேட்கிறேன். 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அப்போது நீங்கள் யாரோடு கூட்டணி வைத்தீர்கள்? திமுக பாஜக கூட்டணி அமைந்தது. அந்தத் தேர்தலில் வென்று மறைந்த வாஜ்பாய் தலைமையிலே ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த அமைச்சரவையில் முரசொலி மாறன் அமைச்சராகவும் இருந்தார்.
அப்போது மட்டும் நல்ல கட்சியா?
அவர் நோய்வாய்ப்பட்டு ஒரு ஆண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இலாகா இல்லாத அமைச்சராக அவர் பாஜக அரசில் இருந்தார். அப்போது மட்டும் பாஜக நல்ல கட்சியா? 2001 சட்டசபைத் தேர்தலில் பாஜக உடன் திமுக கூட்டணி வைத்தது. அந்தக் கூட்டணியில் விசிக கூட இடம்பெற்று இருந்தது. அப்போதெல்லாம் நல்ல கட்சியாக பாஜக இருந்துள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்தவுடன் மதவாதக் கட்சி ஆகிவிட்டதாம்" என்று சாடினார்.
போட்டோவை காட்டி தாக்கு
அப்போது சட்டென அவர் பக்கத்தில் நின்ற நபரிடம் இருந்து போட்டோ ஒன்றையும் எடுத்து மக்களிடையே காட்டினார். அதில் கருணாநிதி, வாஜ்பாய் மற்றும் முரசொலி மாறன் ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பது போல இருந்தது. அதைக் காட்டி பேசிய எடப்பாடி பழனிசாமி, "இப்படிக் கூட்டணி வைத்திருந்த கட்சி இன்று எப்படிப் பேசுகிறார்கள் பாருங்கள்.. ஸ்டாலின் வரலாற்றை நினைத்துப் பார்த்துப் பேச வேண்டும்.. இனியும் பச்சோந்தி போல நிறம் மாற முடியாது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications