"பிடிக்கலைனா.. வாங்காதீங்க..!" ரேசன் அரிசி விவகாரம்.. கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபர
திருவள்ளூர்: ரேசன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசிகளை ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் ரேசன் கடைகள் மூலம் அரிசிகள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அரிசின் தரம் மோசமாக உள்ளதாகப் புகார்கள் எழுவது வாடிக்கையாக உள்ளது
அதேபோல ரேஷன் அரிசிகள் வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்பட்டு, அவை பாலிஷ் செய்யப்பட்டு, பிரபல கம்பெனி அரிசிகள் போலவும் விற்பனை செய்யப்படுவது அதிகரித்து உள்ளது.

ஆய்வு
இந்தச் சூழலில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் செங்குன்றம் பகுதியில் ரேஷன் கடைகளுக்கு அரிசி அனுப்பும் தனியார் ஆலையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். உற்பத்தி விலை அதிகரித்துள்ளதால், தமிழக அரசு அளிக்கும் அரவைக் கூலியை உயத்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரிசி ஆலை சங்கத் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

கோரிக்கை
இதையடுத்து அந்த அரிசி ஆலையில் அரிசி அரைவைச் செய்யப்படும் முறை குறித்தும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பட்டும் அரிசின் தரம் குறித்தும் அவர் கேட்டறிந்தார். மேலும், அங்குள்ள மேலாண்மை பயிற்சி வகுப்புகளைப் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

நடவடிக்கை
செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "ரேஷன் அரிசியை கடத்தில் பாலிஷ் செய்து போலி பிரண்டுகளை போல விற்பனை செய்த சம்பவத்தில் சக்கரவர்த்தி என்பவரைத் தேடி வருகிறோம். ரேசன் அரிசி, கோதுமை கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குத் துணை போகும் அதிகாரிகள் மீதும் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெரிய கடத்தல்காரர்களும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பாமல் இருக்கத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கைது
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 113 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 2962 டன் ரேசன் அரிசியைப் பறிமுதல் செய்துள்ளோம். இந்த விகாரத்தில் அதில் 63 பேரைக் கைது செய்துள்ளோம். அவர்களில் 8 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

வாங்க வேண்டாம்
ரேஷன் அரிசியைப் பயன்படுத்தாத மக்கள், அதை வாங்கி சிறு வியாபாரிகளுக்கு விற்கிறார்கள். அது தவறு. மக்களுக்கு உதவ வேண்டும் என்று அரசு கொண்டு வரும் நலத்திட்டங்களை முறையாகச் செயல்படுத்த மக்கள் தான் உதவ வேண்டும். அரிசியை வாங்கி சாப்பிடப் பிடிக்கவில்லை என்றால், அதை வாங்க வேண்டாம். ரேஷன் அரிசியை வாங்கி கடைகளுக்கு விற்க வேண்டாம்.

ஆக்ஷன்
ரேசன் கடத்தலைத் தடுக்கவும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, உணவு பாதுகாப்புத் துறை, காவல் துறை ஆகியோருடன் இணைந்து ரேசன் அரிசி கடத்தலைத் தடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். விரைவில் ரேஷன் அரிசி கடத்தல் முழுமையாகத் தடுத்து நிறுத்தப்படும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications