“ஆறுதல்”.. செங்குன்றம் கெமிக்கல் கிடங்கு ரசாயன வாயு கசிவு நின்றது! போராடி தடுத்த தீயணைப்பு படையினர்
திருவள்ளூர்: சென்னை புறநகர் பகுதியான செங்குன்றம் அருகே உள்ள ரசாயண கிடங்கில் ஏற்பட்டு இருக்கும் விபத்து காரணமாக விஷ வாயு வேகமாக வெளியேறிய நிலையில் தற்போது தீயணைப்பு படையினரின் தீவிர முயற்சியால் வாயு கசிவு நிறுத்தப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்து உள்ள பாயாசப்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான ரசாயண கிடக்கு அமைந்து இருக்கிறது. இந்த கிடங்கில் பிளாஸ்டிக் பொருட்களும், காஸ்டிக் சோனா, பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட ஏராளமான ரசாயண பொருட்களும் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி இந்த கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு ஏழுக்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு படையினர் போராடி தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக பிளாஸ்டிக் மற்றும் வேதிப் பொருட்கள் தீயில் கருகி கரும்புகை அப்பகுதியை சூழ்ந்தது.
இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. அதே நேரம் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீ விபத்தில் கருதி நாசமாகின. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில் இன்று காலை அதே ரசாயண கிடங்கில் இருந்து வெள்ளை நிற விஷ வாயு வெளியானது. ஏற்கனவே தீ விபத்தால் வெளியான கரும்புகையின் காரணமாக அப்பகுதி மக்களுக்கு சுவாக குறைபாடுகள் ஏற்பட்டு இருக்கும் நிலையில் இந்த புகையை கண்டு அவர்கள் அச்சமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் அதிகாரிகள் இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். முகத்தில் துணியை கட்டிக்கொண்டே ரசாயண கிடங்கு அருகே பொதுமக்களும் அதிகாரிகளும் சென்றனர். ஒரு வாரத்துக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த ரசாயண கழிவுகளை குழி தோண்டி புதைக்காமல் அப்படியே விட்டு விட்டு சென்றதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தீயில் கருகிய ரசாயண கழிவுகள் குவியலாக கிடந்த நிலையில், தற்போது அப்பகுதியில் மழை பெய்த காரணத்தால் கழிவுகளில் இருந்து ரசாயண புகை கிளம்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் ரசாயண கழிவுகளின் மீது மண் கொட்டி மூடும் பணி நடைபெற்று வருகிறது.
ரசாயன கிடங்கில் இருந்து வெளியாகி வரும் இந்த நச்சு புகையின் காரணமாக மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு, கண் எரிச்சல், தோல் அலர்ஜி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே செங்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களும், குழந்தைகளுக்கும் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தீயணைப்பு படையினரின் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு அப்பகுதியில் எரிவாயு கசிவு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன் அங்கு குவியலாக இருந்த ரசாயண கழிவுகள் குழி தோண்டி புகைப்பட்டன.












Click it and Unblock the Notifications