பாக்கெட்டில் இருந்த மோடி படத்தை போலீஸ் பிடுங்கி வீசிட்டாங்க ஸார்.. தமிழக பாஜக நிர்வாகி பரபர புகார்
திருவள்ளூர்: திருப்பதியில் சோதனையின்போது தமிழக பாஜக நிர்வாகியின் பாக்கெட்டில் இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை போலீசார் குப்பை தொட்டியில் வீசியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பதி எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி சென்றாயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவர் பூண்டி ஒன்றியத்தின் பாஜக தலைவராக உள்ளார்.
இவர் கட்சி நிர்வாகிகளுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தார். அதன்படி கடந்த 3ம் தேதி கட்சி நிர்வாகிகள் 6 பேருடன் திருப்பதி கோவிலுக்கு புறப்பட்டார்.

பாக்கெட்டில் பிரதமர் படம்
இவர்கள் காரில் புறப்பட்டு திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருமலா கோவில் அருகே அலிபிரி போலீஸ் சோதனைச் சாவடி அருகே போலீசார் காரை நிறுத்தினர். மேலும் கார் மற்றும் பாஜக நிர்வாகிகளை சோதனை செய்தனர். பூண்டி பாஜக செயலாளர் சுரேஷ் என்பவர் தனது பாக்கெட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை வைத்திருந்தார்.

குப்பை தொட்டியில் வீச்சு
இந்த படத்தை எடுத்த போலீசார் அதனை அருகே உள்ள குப்பை தொட்டியில் வீசினர். இதனால் அவர்கள் கோபமடைந்தனர். இதையடுத்து பாண்டுரங்கன், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எஸ்பியிடம் புகார்
இதையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்து வீடு திரும்பினர். இந்நிலையில் தான் சம்பவம் தொடர்பாக பூண்டி ஒன்றிய பாஜக தலைவர் பாண்டுரங்கன் திருப்பதி எஸ்பியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் சோதனையில் ஈடுபட்டு பிரதமர் படத்தை அவமதிப்பு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
அதில், ‛‛திருப்பதி திருமலா கோவிலுக்கு சென்ற பாஜக நிர்வாகிகளை சோதனைச் சாவடியில் வரிசையாக நிற்க வைத்து போலீசார் சோதனை செய்தனர் அதற்கு முழுமையாக நாங்கள் ஒத்துழைப்பு அளித்தோம். பின்னர் செயலாளர் சுரேஷ் தனது பாக்கெட்டில் வைத்திருந்த மோடியின் படத்தை வேண்டும் என்றே எடுத்து அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் வீசினர். இதுபற்றி போலீசாரிடம் கேட்டதற்கு சரியாக பதில் அளிக்கவில்லை. இது பிரதமரை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் பிரதமரின் புகைப்படத்தை குப்பை தொட்டியில் வீசிய போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications