ஆடி பவுர்ணமி.. திருவண்ணாமலைக்கு கிரிவலம் போறீங்களா? நல்ல நேரம் எப்போது? சிறப்பு ரயில்களும் இருக்கு!
திருவண்ணாமலை: ஆடி பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கிரிவலம் வருவதற்கான நல்ல நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு ஏதுவாக, வேலூர் கன்டோன்மென்ட் நிலையத்தில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலை சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக போற்றப்படுகிறது. மலையே சிவமாக போற்றப்படுகிறது. பக்தர்கள் தினசரியும் கிரிவலம் வந்து வணங்கி வருகின்றனர். பவுணர்மி, மாத பிறப்பு, சித்திரை மாத பிறப்பு உள்ளிட்ட நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வணங்குவார்கள்.

திருக்கார்த்திகை தீபம் திருவிழா இங்கு பத்து நாட்கள் கொண்டாட்டப்படும். அப்போது மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு பெளர்ணமிகள் வருகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆடி பவுர்ணமி தினமாக செவ்வாய் அதிகாலை 03.26 முதல் 2ஆம் தேதி புதன் அதிகாலை 01.05 வரை ஆடி பெளர்ணமிதிருவண்ணாமலை கிரிவலம் செல்லவதற்கான தேதி மற்றும் நேரத்தை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 01 ம் தேதியன்று வரும் பெளர்ணமி நாளில் திருவோண விரதமும் சேர்ந்தே வருகிறது. அது மட்டுமல்ல அன்று ஆடித்தபசு திருநாளாகும். பார்வதியின் தவத்தினை ஏற்று, சிவ பெருமானும் திருமாலும், சிவன் பாதி - விஷ்ணு பாதி என ஒரே உருவமாக சங்கரநாராயணர் ரூபமாக அம்பிகைக்கு காட்சி கொடுத்த நாள் இந்த ஆடித்தபசு நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு பவுர்ணமி கிரிவலம் வருவதற்கு நாளைய தினம் ஆகஸ்ட் 01 ம் தேதியன்று அதிகாலை 03.26 துவங்கி, ஆகஸ்ட் 02 ம் தேதி அதிகாலை 01.05 வரை பெளர்ணமி திதி உள்ளது. அதனால் இந்த நாளில் அதிகாலை 03.51 துவங்கி, ஆகஸ்ட் 02 ம் தேதி அதிகாலை 12.01 வரை நல்ல நேரம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதே போல் ஆகஸ்ட் 30 ம் தேதி வரும் பெளர்ணமியும் தனிச்சிறப்பு சிறப்பு வாய்ந்ததாகும். அன்று ஆவணி திருவோணமும் அவிட்டமும் சேர்ந்து வருகிறது. ஆகஸ்ட் 30 ம் தேதி காலை 10.46 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 31 ம் தேதி காலை 08.17 வரை பவுர்ணமி திதி உள்ளது. இதனால் பக்தர்கள் ஆகஸ்ட் 30 ம் தேதி காலை 10.58 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 31 ம் தேதி காலை 07.05 மணி வரை கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு ஏதுவாக, வேலூர் கன்டோன்மென்ட் நிலையத்தில் இருந்து 1ஆம் தேதி இரவு 9.50 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி சாலை, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை நள்ளிரவு 12.05 மணிக்கு அடைகிறது. பின்னர் 2-ந் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை காலை 5.35 மணிக்கு சென்றடையும்.
மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 1ஆம் தேதி காலை 9.15 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை முற்பகல் 11 மணிக்கு வந்தடையும். பின்னர், திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு,விழுப்புரம் ரயில் நிலையத்தை பிற்பகல் 2.15 மணிக்கு சென்றடையும்.

தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் மெமு ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 1ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலை ரெயில்நிலையத்தை இரவு 10.45 மணிக்கு சென்றடையும். பின்னர் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து ஆக. 2ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, மீண்டும் விழுப்புரம் ரயில் நிலையத்தை அதிகாலை 5 மணிக்கு சென்றடையும்.
திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மூலம் வேலூர் வழியாக சென்னை கடற்கரைக்கும், விழுப்புரம் வழியாக தாம்பரம் மற்றும் மயிலாடுதுறைக்கும் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications