திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நள்ளிரவில் வீட்டுக்கு வந்த ஐஜி.. சென்னைக்கு வந்த ஆபத்து.. கலைஞர் செயல்பட்ட விதம்! விவரித்த ஸ்டாலின்

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: "பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியால் ஏற்பட்ட துன்பத்தைத் துடைப்பது ஒரு பக்கம் என்றால், தொழில்துறை உள்ளிட்ட வளர்ச்சியை உருவாக்கும் பணி மற்றொரு பக்கம் என மக்கள் கனவு காணும் அரசாக, கவலைகளைப் போக்கும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கும்" என - திருவண்ணாமலை 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Recommended Video

    திருவண்ணாமலை: தொடங்கியது உங்கள் தொகுதியில் ஸ்டாலின்: ஜெயித்தவுடன் கல்விக்கடன் ரத்து!

    இன்று (29-01-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் - திருக்கோவிலூர் சாலை - நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள கலைஞர் அரங்கில், "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரைச் சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார். இந்நிகழ்ச்சியில், அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்று, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

    "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" நிகழ்வைத் தொடங்கி வைத்து ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: நான் நலம், நீங்கள் நலமா? நான் ரெடி, நீங்கள் ரெடியா? உங்கள் எல்லோரையும் பார்ப்பதற்காகவும் - உங்களுடைய குறைகளைக் கேட்பதற்காகவும் தான் இப்போது நான் இங்கே வந்திருக்கிறேன். இப்போது நீங்கள் இங்கு திரண்டு இருக்கிறீர்கள். எதிர்பார்த்ததை விட மிக எழுச்சியோடு - ஆர்வத்தோடு - ஆரவாரத்தோடு இங்கே வந்திருக்கிறீர்கள்.

    வாங்கிச் செல்லுங்கள்.

    வாங்கிச் செல்லுங்கள்.

    நீங்கள் அனைவரும் இங்கு வந்தவுடன், வாயிலிலேயே உங்கள் குறைகளைப் பதிவு செய்து விட்டீர்களா? அப்போது உங்களிடத்தில் ஒரு ரசீது கொடுக்கப்பட்டிருக்கும். அந்த ரசீதை வாங்க தவறியிருந்தால் தயவு செய்து வெளியில் செல்லும்போது, நீங்கள் பதிவு செய்த இடத்தில் மறவாமல் வாங்கிச் செல்லுங்கள். ஏனென்றால் அது சாதாரண ரசீது அல்ல. அந்த ரசீதை வைத்துக்கொண்டு நீங்கள் என்னிடத்தில் கேள்வி கேட்கலாம். உங்கள் மனுக்கள் அனைத்தும் இந்த மேடையில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போடப்பட்டுள்ளன.

    ஸ்டாலின் உரை

    ஸ்டாலின் உரை

    இங்கு வந்திருக்கும் அனைவரையும் பேச வைக்க முடியாத காரணத்தால், அவற்றில் சில மனுக்களை உங்கள் முன்னால் எடுத்து, அதில் இருக்கும் பெயர்களைச் சொல்லும்போது, அவர்கள் எழுந்து சுருக்கமாக தங்கள் கருத்துகளை எடுத்து சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு திமுக தலைவர் தொடக்கவுரை ஆற்றினார். "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" நிகழ்வை நிறைவு செய்து கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

    இதயத்தில் ஏக்கம்

    இதயத்தில் ஏக்கம்

    கண்களில் கனவுகளோடும், கையில் மனுக்களோடும், இதயத்தில் ஏக்கத்துடனும் இந்த அரங்கத்தை நோக்கி வந்திருக்கும் தமிழ்மக்கள் அனைவருக்கும் என்னுடைய இதயபூர்வமான வணக்கத்தையும் நன்றியையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு என்னால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் வந்திருக்கிறீர்கள். என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என்னுடைய தலைதாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
    அடுத்தவர் நம்பிக்கையைப் பெறுவது தான் ஒரு மனிதனின் மாபெரும் சொத்து. இவர் நல்லவர், நம்பிக்கையானவர், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார், இவரை நம்பி நம்முடைய கோரிக்கையை வைக்கலாம் - என்று உங்களிடம் நான் நம்பிக்கையைப் பெற்றதைத் தான் என்னுடைய சொத்தாகக் கருதுகிறேன். இத்தகைய நம்பிக்கையைப் பெறுவது சாதாரணமான விஷயம் அல்ல!

     காப்பாற்றுவேன்

    காப்பாற்றுவேன்

    நீங்கள் எத்தகைய நம்பிக்கையை வைத்துள்ளீர்களோ, அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்! உங்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் 100 சதவீதம் உண்மையாக இருப்பேன் என்ற வாக்குறுதியைத் திருவண்ணாமலையில் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்! உங்கள் கவலைகளை, உங்களது கோரிக்கைகளை, உங்களது எதிர்பார்ப்புகளை, என்னிடம் நீங்கள் ஒப்படைத்துள்ளீர்கள். இனி இவை என்னுடைய கவலைகள், என்னுடைய கோரிக்கைகள், என்னுடைய எதிர்பார்ப்புகள். இவற்றுக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன். கடந்த 25 ஆம் தேதி காலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களின் முன்னால் நான் ஒரு சபதம் எடுத்தேன்! "மு.க.ஸ்டாலின் ஆகிய நான், தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு". இதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளித்த உறுதிமொழி! அந்த உறுதிமொழியின்படி அமைக்கப்பட்ட முதல் நிகழ்ச்சியை திருவண்ணாமலையில் இருந்து தொடங்கி இருக்கிறேன்!
    சனவரி 25 ஆம் தேதி, முத்தமிழறிஞர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் வைத்து இந்த உறுதிமொழியை எடுத்தேன்!

    வாழ்நாள் போராளி

    வாழ்நாள் போராளி

    14 வயதில் தமிழ்க்கொடி ஏந்தி திருவாரூர் மண்ணில் தமிழ்காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர் அவர்கள் தான், 95 வயது வரைக்கும் இந்த தாய்த்தமிழ் நாட்டுக்காக அயராது உழைத்த வாழ்நாள் போராளி! போராளி மட்டுமல்ல - மிகச்சிறந்த நிர்வாகி! அவரால் உருவாக்கப்பட்ட மாநிலம் தான் இந்த தமிழ்நாடு!
    மலைகளால் உயர்ந்த திருத்தணி முதல் கடலால் சூழ்ந்த கன்னியாகுமரி வரை உள்ள தமிழ்நாட்டின் எல்லா ஊர்களுக்குமான அனைத்துத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்திக் கொடுத்தவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்! அதனால் தான் ஒரு முறை அல்ல, ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்! அத்தகைய தலைவர் தான் "சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்! - என்று சொன்னார். அவரது வழியில் இந்த ஸ்டாலினும் சொன்னதைச் செய்வான்! செய்வதைத் தான் சொல்வான்! என்ற உறுதிமொழியை நான் கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் இருந்து எடுத்துக் கொண்டேன். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று சொன்னார் கலைஞர்! செய்தார் கலைஞர்! தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தனி இடஒதுக்கீடு தரப்படும் என்று சொன்னார் கலைஞர்! செய்தார் கலைஞர்! தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 7000 கோடி விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னார் கலைஞர்! செய்தார் கலைஞர்! தி.மு.க. ஆட்சி அமைந்ததும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும் என்று சொன்னார் கலைஞர்! செய்தார் கலைஞர்! அத்தகைய கலைஞரின் மகன் நான். நானும் வாக்குறுதி அளிக்கிறேன்! 100 நாட்களில் உங்களது கோரிக்கைகள் நிறைவேறும் என்ற வாக்குறுதியை அளிக்கிறேன்!

    சென்னை வெள்ளம்

    சென்னை வெள்ளம்

    14 வயதில் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.வை ஆரம்பித்து மக்கள் பணியாற்றத் தொடங்கியவன் நான். இந்த ஐம்பது ஆண்டு காலத்தில் தமிழகத்தில் என் கால் படாத கிராமங்களே இல்லை. பயணம் செல்லாத நகரங்களே இல்லை! இந்த அரை நூற்றாண்டு காலத்தை தமிழ்நாட்டு மக்களோடு கழித்தவன் நான். அவர்களது சுக துக்கங்களில் பங்கெடுத்தவன் நான். தமிழ்நாட்டின் எந்தப் பகுதி மக்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் நீளும் கரம் என்னுடைய கரமாகத்தான் இருக்கும்! முதலில் சென்று அவர்களைப் பார்க்கும் மனிதனாக நான் தான் இருப்பேன். எங்களை எல்லாம் அப்படித்தான் தலைவர் கலைஞர் அவர்கள் வளர்த்தார்கள்.
    ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன்.... 31.3.1999 அன்று சென்னையே வெள்ளத்தால் மூழ்கும் பேராபத்து ஏற்பட்டது. அதனைத் தடுத்தவர் முதல்வர் கலைஞர் அவர்கள். முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கோபாலபுரம் வீட்டில், இரவில் தூங்கிக் கொண்டு இருக்கிறார். திடீரென்று நள்ளிரவில் முதலமைச்சர் கலைஞர் அவர்களைச் சந்திக்க புலனாய்வுத் துறை ஐ.ஜி.வருகிறார். மிக அவசரமான சூழல், அதனால் முதலமைச்சரைச் சந்திக்க வேண்டும் என்கிறார். உடனே கலைஞர் அவர்களை எழுப்புகிறார்கள். செங்குன்றம் ஏரி உடையப் போகிறது, அது உடைந்தால் சென்னையும் சுற்றுப்பகுதியும் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்று சொல்கிறார் அந்த அதிகாரி. அதிர்ச்சி அடைந்தார் முதலமைச்சர். உடனே அரசாங்க இயந்திரம் அனைத்தையும் தட்டி எழுப்பினார். அன்றைக்கு நான் சென்னை மேயராக இருந்தேன். மாநகராட்சி நிர்வாகத்தை முழுமையாக இறக்கிவிட்டோம். அந்த நள்ளிரவில் கோட்டைக்கு புறப்பட்டு விட்டார் முதலமைச்சர் கலைஞர். அவரோடு நானும் சென்றேன். அனைவரையும் அங்கே வரச் சொல்லிவிட்டார். பாதி அமைச்சரவை கோட்டைக்கு வந்துவிட்டது. 30 அடி ஆழம், 20 அடி அகலத்துக்கு ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு அளவுக்கு தண்ணீர் இருந்தது. முதலமைச்சர் கலைஞர் எடுத்த துரிதமான நடவடிக்கைகள் காரணமாக அதிகாலையில் ஓரளவு நிலைமை சீரடையத் தொடங்கியதும், செங்குன்றம் சென்றோம். நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது, மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தனது கண்ணால் பார்த்த பிறகுதான் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அமைதியானார்கள். இதுதான் கலைஞர்!

    மேயர் பொறுப்பு

    மேயர் பொறுப்பு

    தான் மட்டுமல்ல, தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் இப்படித்தான் கலைஞர் அவர்கள் வளர்த்தார்கள். ஒரு சம்பவம் நடந்ததும் உடனே அந்த இடத்துக்கு போய்விட வேண்டும், மக்களைப் பார்க்க வேண்டும், மக்களோடு நாமும் இருக்க வேண்டும், அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று என் மனம் துடிக்கிறது என்றால் அதற்குக் காரணம் கலைஞர் ஊட்டிய இந்த உணர்வுதான். மக்களுக்கு உண்மையாக இரு - என்பதைத்தான் கலைஞர் அவர்கள் எங்களுக்கு ரத்தத்தில் ஊட்டி வந்தார்.
    சென்னை மாநகரத்தின் மேயராக நான் 1996-ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். மேயர் என்கிற முறையில் என்னுடைய உரையைத் தயார் செய்து, முதலமைச்சர் கலைஞரிடத்தில் காண்பித்தேன். மேயர் பதவி என்று நான் குறிப்பிட்டு இருந்தேன். அதை அடித்துவிட்டு, மேயர் பொறுப்பு என்று மாற்றி எழுதித் தந்தார் கலைஞர் அவர்கள். ''இது பதவி இல்லை, பொறுப்பு. பொறுப்பை உணர்ந்து நடந்துக்கோ' என்று சொன்னார் கலைஞர் அவர்கள். மேயராக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும், துணை முதல்வராக இருந்தாலும், இன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் - இதைப் பதவியாக இல்லாமல் பொறுப்பாக உணர்ந்து செயல்படும் பக்குவத்தை நான் பெறுவதற்கு பேரறிஞர் அண்ணா போட்ட அடித்தளம் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஊட்டிய உணர்வுதான் காரணம்!

    மகளிர் சுயஉதவிக்குழுக்கள்

    மகளிர் சுயஉதவிக்குழுக்கள்

    திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சாதாரண சாமான்யர்களின் இயக்கம் என்றார் பேரறிஞர் அண்ணா! நான் சீமான் வீட்டுப்பிள்ளை அல்ல, சாமான்யர் வீட்டுப் பிள்ளை என்றார் முத்தமிழறிஞர் கலைஞர்! சாதாரண சாமான்யர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம், சாதாரண சாமான்யர்களுக்காகவே ஆட்சியை நடத்தியது.
    விவசாயிகள் - நெசவாளர்கள் - தொழிலாளர்கள் - அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் - சிறுகுறு தொழில் செய்வோர்- ஏழைகள் - ஒடுக்கப்பட்டோர் - பட்டியலினத்தவர் - பழங்குடிகள் - பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் - ஆதரவற்றோர் - அபலைகள் - முதியோர் - பெண்கள் - மாற்றுத்திறனாளிகள்- திருநங்கையர் - சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் - புறம்தள்ளப்பட்டவர்கள் - ஆகியோரின் மேம்பாட்டுக்கு எவை அடித்தளமாக அமையுமோ அத்தகைய திட்டங்களைத் தீட்டிய அரசு தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு! ''வீட்டில் நான்கு குழந்தை இருந்தால் மெலிந்த குழந்தை மீதுதான் பெற்றோருக்கு அன்பு இருக்கும். அதைப் போலத்தான் மெலிந்த குழந்தைகளை முன்னேற்ற நினைக்கிறேன்" - என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள். அந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான், 100 நாட்களில் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்ற இந்த வாக்குறுதி ஆகும்! எங்கே சென்றாலும் நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாகப் பயன்பெற்ற பெண்களை அதிகம் பார்க்க முடிகிறது. இராமநாதபுரம் கூட்டுக்குடி நீர் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், சென்னையில் எழுந்து நிற்கும் பாலங்கள், தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், விவசாயிகளுக்கு தலவரி - தலமேல் வரியை ரத்து, குளம், குட்டைகளை தூர் வாரியது, ஊரகப்பகுதி மக்களுக்கான மின் கட்டணத்தை குறைத்தது, நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தொழில் துறையைக் கவனித்தபோது சென்னையைச் சுற்றிலும் உருவாக்கப்பட்ட ஏராளமான தொழிற்சாலைகள் - ஆகியவை எனது இன்றைக்கும் பெயரைச் சொல்லும்! இத்தகைய வளர்ச்சி மிகு தமிழகத்தை உருவாக்க நான் திட்டமிட்டுள்ளேன். பல்லாயிரம் கோடி செலவு செய்து தொழில் நிறுவனங்களை உருவாக்குவது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் ஒவ்வொரு தமிழ்க்குடிமகனும் கவலையின்றி வாழும் - வாழ, ஒவ்வொரு தனிமனிதனும் அ.தி.மு.க. அரசால் அடைந்த துன்பங்களை கழக ஆட்சி அமைந்ததும் அதனைத் துடைக்கும். துடைக்க வேண்டும். கடந்த பத்து ஆண்டு காலத்தில் தமிழகம் எல்லாத் துறையிலும் எல்லா வகையிலும் அதலபாதாளத்துக்கு போய்விட்டது. இந்த அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தரப்பு மக்களுக்கும் நிம்மதியாக இல்லை. எந்தத் தொகுதிக்கும் எந்த புதிய திட்டங்களும் இல்லை. முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் தொகுதிகள் கூட கேவலமாக இருக்கின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளை இவர்கள் தங்கள் தொகுதிக்குக் கூடச் செய்து தரவில்லை! மக்கள் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க தி.மு.க.வால் தான் முடியும் என்ற நம்பிக்கையுடன் கோரிக்கை மனுக்களையும் இன்று வழங்கியிருக்கிறீர்கள். மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவேன் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் மக்களை நான் சந்திக்கிறேன்! மக்களின் அரசாக - மக்கள் நல அரசாக- மக்கள் விரும்பும் அரசாக- மக்கள் கவலைகளைப் போக்கும் அரசாக- மக்கள் கனவுகாணும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும்!

    பெட்டியை திறப்பேன்

    பெட்டியை திறப்பேன்

    ந்த அரசாங்கம்தான் வரப்போகிறது என்ற நம்பிக்கையுடன் நீங்கள் கொண்டுவந்த பாரங்களை, இப்போது என் முதுகில் ஏற்றி விட்டீர்கள். என்னை நம்பி ஏற்றி வைத்திருக்கிறீர்கள். நீங்கள் நம்பிக்கையுடன் செல்லுங்கள்! திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் இந்தக் கோரிக்கையை வைத்துள்ள உங்களுக்கு நான் சொல்வது, ஆமாம்; கழக ஆட்சி தான் அமையும்! உங்கள் கவலைகள் யாவும் தீரும்! என்ற வாக்குறுதியை மீண்டும் நான் வழங்குகிறேன். உங்களுடைய அனைத்து பிரச்சினைகளும் எனக்கு புரிகிறது. உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் உங்கள் முன்னால் இந்த பெட்டியில் போட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனுடைய சாவி என்னிடம் தான் இருக்கப்போகிறது. (மேடையில் மக்கள் முன்னிலையில் ஸ்டாலின் தனது கையாலேயே மனுக்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியைப் பூட்டி சீல் வைத்தார்) இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் தேர்தல் நடக்கப்போகிறது. தேர்தல் முடிந்து, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று, நான் பதவி பிரமாணம் எடுத்த அடுத்த நாள் இந்தப் பெட்டியை நானே திறப்பேன். இந்த மனுக்கள் அனைத்தும், ஏற்கனவே நான் சொன்னதுபோல, இதற்கென தனி பிரிவு அமைக்கப்பட்டு, இந்த அடிப்படை பிரச்சினைகள் அனைத்தையும் முன்னுரிமைக் கொடுத்துத் தீர்த்து வைப்பேன். கவலைப்படாதீர்கள்.
    நான் கலைஞருடைய மகன் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நம்பிக்கையோடு இருங்கள். நான் கலைஞருடைய மகன். நம்பிக்கையோடு செல்லுங்கள். விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்" இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.

    English summary
    IG who came home at midnight at CM home .. Danger who came to Chennai by heavy rain, How CM karunanidhi acted! Stalin described
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X