பாலியல் வழக்கு: தலைமறைவான திண்டுக்கல் சுரபி கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் போளூர் கோர்ட்டில் சரண்
திருவண்ணாமலை: நர்சிங் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தப்பி ஓடி தலைமறைவானதால் தேடப்பட்டு வந்த சுரபி கல்லூரிகளின் தாளாளர் ஜோதிமுருகன் திருவண்ணாமலை அருகே போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டி, செம்பட்டி பகுதிகளில் சுரபி போன்ற பெயர்களில் நர்சிங் கல்லூரி உள்ளிட்டவைகளை நடத்தி வருபவர் ஜோதி முருகன். திண்டுக்கல் மாவட்டத்தில் பிரபல தொழிலதிபராவார்.

யார் இந்த ஜோதிமுருகன்?
திரைப்படங்களுக்கு தமது கல்லூரிகளை இலவசமாக படப்பிடிப்புக்கு கொடுத்து அதன் மூலம் படங்களிலும் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டிக் கொள்பவர் ஜோதிமுருகன். ஒருசில திரைப்படங்களையும் தயாரித்திருக்கிறார் ஜோதிமுருகன்.

மாணவர்கள் போராட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஜோதிமுருகன் மீது அவரது நர்சிங் கல்லூரி மாணவிகள் பாலியல் தொல்லை புகார் கொடுத்து சாலை மறியல் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் ஜோதிமுருகனை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

சரணடைந்த ஜோதிமுருகன்
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஜோதி முருகனுக்கு உடந்தையாக இருந்ததாக விடுதி காப்பாளர் அர்ச்சனா கைது செய்யப்பட்டார். ஆனால் ஜோதிமுருகன் தப்பி ஓடி தலைமறைவானார். ஜோதிமுருகனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ஜோதிமுருகன், திருவண்ணாமலை அருகே போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

சுரபி கல்லூரியை அரசு ஏற்க வேண்டும்
தற்போது திண்டுக்கல் சுரபி கல்லூரிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுரபி கல்லூரியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்துவதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications