சிறுமிகளை சிதைத்த பாறைகள்! அடையாளம் தெரியாத அளவுக்கு கிடைத்த உடல் பாகங்கள்! மீட்பு படையினர் கண்ணீர்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மண் சரிவில் புதையுண்ட 7 பேரை மீட்கும் பணியில் சிறுவனின் சடலத்தை எடுத்ததுமே பேரிடர் மீட்பு குழுவினர் கண்ணீர் விட்டனர். இதுவரை 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கவுதம் என்ற சிறுவன், ராஜ்குமார் என்ற இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மீதமுள்ள இரு சிறுமிகள் அடையாளம் தெரியாத அளவுக்கு அவர்களின் சடலங்கள் மீது சேறும் சகதியும் இருப்பதால் அடையாளம் காண மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். அங்கு மண்ணை சுத்தம் செய்ததும் உறவினர்களை அழைத்து அந்த சிறுமிகள் அடையாளம் காணப்படுவர்.

இந்த 7 பேரும் எப்படியாவது உயிருடன் மீட்கப்பட மாட்டார்களா என அப்பகுதியினர் பிரார்த்தனைகள் செய்திருந்த நிலையில் இதுவரை 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இரு சடலங்களை மீட்கும் பணிகள் நடைபெறுகிறது. மேலும் ஒருவரது சடலம் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இன்று இரவுக்குள் மீட்பு பணி முடிந்துவிடும் என தெரிகிறது. அப்பகுதியில் சடலங்கள் கிடைத்ததும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். நேற்று வரை விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் இப்படி சடலங்களாக கிடக்கிறார்களே என கதறுகிறார்கள்.
பெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலையில் நேற்றைய தினம் கடுமையான மழை பெய்தது. இந்த தாக்கத்தால் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரத்தில் உள்ள மலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அப்போது கற்கள், ராட்சத பாறைகள் உருண்டு வந்தது. வீடுகள் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கரவாகனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் அடித்து செல்லப்பட்டு மண்ணில் புதையுண்டன.
அந்த பகுதியில் வ.உ.சி. நகர் 11-ஆவது தெருவில் மலையடிவாரத்தில் இருந்த 4 வீடுகள் மண் சரிவில் சிக்கியது. மேலும் வீடுகள் மீது பாறைகளும் விழுந்தது. அப்போது வீடுகளில் இருந்த ராஜ்குமார் (32), மீனா (26), இனியா (6), மகா (12), கவுதம் (8), வினோதினி (14), ரம்யா (12) ஆகியோர் மண் சரிவில் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் கிடைத்தன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு திருவண்ணாமலை தீயணைப்புத் துறையினர் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். மண் சரிவு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இவர்களை மீட்க 35 பேர் வரவழைக்கப்பட்டு இன்று 2 ஆவது நாளாக தேடப்பட்டு வந்தனர். இவர்களுடன் திருவண்ணாமலை மாவட்ட காவல் கமாண்டோ குழுவினர் 50 பேரும் மாநில பேரிடர் மீட்பு படையினர் 20 பேரும் என மொத்தம் 170 பேர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications