பிறந்த நாளுக்கு மெயின் ரோட்டை மறித்த தவெக மாசெ.. கிரேனில் இருந்து மாலை வேற.! வழக்கை போட்ட போலீஸ்
திருவண்ணாமலை: சாலை டிராபிக் அதிகம் இருக்கும் பொது இடத்தில் வைத்து தனது பிறந்த நாளை தவெக மாவட்டச் செயலாளர் உதயகுமார் கொண்டாடி இருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து போலீசார் இப்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
அரசியலில் நுழைந்துள்ள விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அந்தத் தேர்தலிலும் விஜய் கட்சி போட்டியிடவுள்ளது. இதனால் விஜய் கட்சி நிர்வாகிகள் மாநிலம் முழுக்க கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் ஆர்வமிகுதியில் சில தவெக நிர்வாகிகள் செய்யும் செயலும் விமர்சனத்தைக் கிளப்பி வருகிறது.

திருவண்ணாமலை
அப்படித் தான் திருவண்ணாமலை மாவட்டம் செயலாளர் உதயகுமார் செயல் கடந்த இரு நாட்களாக இணையத்தில் பேசுபொருளானது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் உதயகுமார் நேற்று பொது இடத்தில் வைத்து தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். பொதுமக்கள் பயன்படுத்தும் காரில் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.
டிராபிக் அதிகம் இருக்கும் பிரதான சாலையில் உதயகுமார் தனது பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவாளர்களுடன் திறந்த காரில் வலம் வந்துள்ளார். அங்கேயே அவருக்கு கிரேன் மூலம் மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு விடாமல் அதே சாலையில் கேக்கை வெட்டியுள்ளார். மேலும், பொதுமக்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் வகையில் பட்டாசுகளையும் வெடித்துள்ளனர்.
பிறந்த நாள் கொண்டாட்டம்
ஏற்கனவே அந்தச் சாலையில் டிராபிக் இருக்கும் நிலையில், உதயகுமாரின் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தால் அங்கு டிராபிக் மேலும் அதிகரித்தது. இதனால் அப்பகுதியில் சென்ற மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். உதயகுமாரின் இந்த பிறந்த நாள் வீடியோ இணையத்திலும் வெளியானது. இது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை உண்டாக்கியது. தேர்தல் அரசியலில் நுழையும்போதே இப்படிச் செய்யும் நிர்வாகிகள், ஜெயித்தால் என்ன செய்வார்கள் என நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
வழக்குப்பதிவு
இது மிகப் பெரியளவில் சர்ச்சையானது. இதையடுத்து போலீசாரும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளனர். கார்கள் மற்றும் டூவீலரில் சாலையில் ரகளை செய்ததாகச் சொல்லி மாவட்டச் செயலாளர் உதயகுமார் உட்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பொது இடத்தில் மாலை அணிவிக்கப் பயன்படுத்தப்பட்ட அந்த கிரானையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில் ரகளையில் ஈடுபட்டோர் குறித்த தகவல்களையும் திருவண்ணாமலை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
தவெக தலைமை எச்சரிக்கை
உதயகுமாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த தகவல்கள் தவெக தலைமை வரை சென்றுள்ளது. இதுபோல கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்றும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தங்களின் பிறந்தநாள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தும் போது, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு நடத்த வேண்டும். இதை அனைவரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications