திருவாரூர் நகராட்சி கமிஷனருக்கு கனவிலும் நினைக்காத தர்ம சங்கடம்.. அல்வா கொடுத்த சமையல்காரர்
திருவாரூர்: துணை முதல்வரின் உதவியாளர் எனக்கூறி ஆன்லைன் மூலம் திருவாரூர் நகராட்சி ஆணையரிடம் போனில் பேசிய நபர், திருவாரூருக்கு வந்துவிட்டு சென்னை திரும்பும்போது கார் பழுதாகி விட்டது என்று கூறி, 5000 அனுப்ப சொல்லியிருக்கிறார். அதை நம்பி பணம் அனுப்பி உள்ளார் நகராட்சி ஆணையர். இரண்டாவது முறை 2500 கேட்டதும் அதையும் அனுப்பி உள்ளார்.ஆனால் மூன்றாவது முறை கேட்ட போது தான் சந்தேகம் வந்துள்ளது.
முதல்வரை தெரியும், அமைச்சரையும் தெரியும் என்று கூறி சிலர் அரசு ஊழியர்களை ஏமாற்றி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். சிலர் தங்களுக்கு வேண்டிய காரியங்களை சாதிக்க அரசு ஊழியர்களை, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பெயரை அசால்டாக பயன்படுத்துவதும் நடக்கிறது. திருவாரூரில் துணை முதல்வரின் உதவியாளர் என்று கூறி சமையல்காரர் ஒருவர் நகராட்சி ஆணையளாரையே ஏமாற்றி உள்ளார். என்ன நடந்தது என்பதை முழுமையாக பார்ப்போம்.

திருவாரூர் நகராட்சி ஆணையர் தாமோதரன். இவருடைய தொலைப்பேசி எண்ணிற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. இந்த அழைப்பை நகராட்சி ஆணையர் தாமோதரன் எடுத்து பேசியுள்ளார். எதிர் முனையில் பேசிய நபர், நான் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர் பேசுகிறேன் என்று ஆரம்பித்துள்ளார். தான் திருவாரூருக்கு வந்துவிட்டு சென்னை திரும்பும்போது கார் பழுதாகி விட்டது என்றும், உடனடியாக எனக்கு ரூ.5 ஆயிரம் அனுப்புங்கள் என்றும் கூறியிருக்கிறார்.
இதை உண்மை என நம்பிய திருவாரூர் நகராட்சி ஆணையர் ஆன்லைன் மூலம் ரூ.5 ஆயிரம் அனுப்பி உள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து கூடுதலாக ரூ.2 ஆயிரத்து 500 வேண்டும் என்று அந்த நபர் கேட்டிருக்கிறார். இதையும் நம்பி அந்த பணத்தை நகராட்சி ஆணையர் அனுப்பியுள்ளார். இதனிடையே அடுத்த ஒரு மணி நேரம் கழித்து மேலும் ரூ.2,500 அனுப்புங்கள், நான் சென்னை சென்று மொத்தமாக ரூ.10 ஆயிரத்தை திருப்பி அனுப்பி வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்
அப்போதுதான் திருவாரூர் நகராட்சி ஆணையர் தாமோதரனுக்கு அவர் மீது சந்தேகம் வந்துள்ளது. தனது சந்தேகத்தை உறுதி செய்ய விரும்பிய திருவாரூர் நகராட்சி ஆணையர் தாமோதரன் துணை முதல்வர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது அப்படி ஒரு நபர் இல்லை என்கிற உண்மை அவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து தான் ஏமாந்ததை அறிந்த நகராட்சி ஆணையர் இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்தனர்.
விசாரணையில் திருவாரூர் நகராட்சி ஆணையரிடம் செல்போனில் பேசி ஏமாற்றியவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தை சேர்ந்த சரவணக்குமார்(வயது 27) என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர் விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் சமையல் வேலைக்காக சரவணக்குமார் சென்றுள்ளார் என்பதும், அப்போது அங்கு உள்ள சில அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் சரவணக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது.
இந்த பழக்கத்தின் மூலம் அவர் திருவாரூர் நகராட்சி ஆணையரிடம் மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. திருவாரூர் நகராட்சி ஆணையாளரை போல், பலரிடம் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் இவர் மீது பல மாவட்டங்களில் வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணக்குமாரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications