வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்.. திருவாரூரில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம்
திருவாரூர்: திருவாரூரில் வீடு வீடாகச் சென்று 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் ஈடுபட்டுள்ளார் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். இன்னும் 8 மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது திமுக.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக நேற்று திருவாரூர் சென்றார். திருவாரூர் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கருணாநிதி முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் கருணாநிதியின் போராட்டமிக்க பொதுவாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.

இதையடுத்து மாலை 6 மணி அளவில் ரோடு ஷோவை தொடங்கிய முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 6 கி.மீ. தூரம் ரோடு ஷோ மூலம் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். வழிநெடுகிலும் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் திருவாரூரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அரசின் மக்கள் நலத் திட்டங்கள் முறையாக சென்று சேர்கிறதா? என பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தார்.
திருவாரூர் சன்னதி தெருவில், வீடு வீடாகச் சென்று திமுக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி "ஓரணியில் தமிழ்நாடு" இயக்கத்தில் ஒன்றிணையுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முன்னதாக சென்னையில் 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையை ஜூலை 1 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, வீடு வீடாக பிரசாரம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் வீடு வீடாகச் சென்று பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications