திருவாரூரில் பகீர் சம்பவம்.. மனைவியை அடித்துக்கொன்று.. வீட்டின் பின்புறம் புதைத்த கணவன்!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் குடும்ப தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர், உடலை வீட்டின் பின்புறம் புதைத்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரம் காலணித் தெருவைச் சேர்ந்த வடுவம்மாள் வயது(55). இவரது கணவன் பாலையன்(60). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இருவருக்கும் இடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பாலையன் மனைவி வடுவம்மாளை சரமாரியாக தாக்கினர். இதில் மயங்கி விழுந்த வடுவம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கொலையை மறைக்க பாலையன் திட்டமிட்டார்.
அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்து விடாமல் இருக்க அவர் மனைவியின் உடலை தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைத்துள்ளார். வடுவம்மாள் ஏன் சில நாட்களாக வெளியே வரவில்லை? என்று அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
மேலும் அவரது வீட்டின் பின்புறத்திலிருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்களுக்கு சந்தேகம் வலுத்தது. இதனால் அவர்கள் திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பாலையனிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தகராறின்போது மனைவியை அடித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதனை தொடர்ந்து பாலையனை போலீசார் கைது செய்தனர். அவரது மனைவியின் உடலை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications