ஜாபர் சாதிக் பெயரில் போன இ-மெயில்.. திருப்பதியில் 4 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பரபரப்பு
திருப்பதி: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது விவகாரத்தை தொடர்புப்படுத்தி திருப்பதியில் உள்ள பிரபலமான 4 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திரா மாநிலத்தில் புகழ்பெற்ற திருப்பதி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். இதனால் எப்போதும் திருப்பதி கோவில் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் போலீஸ் கண்காணிப்பு என்பது இருக்கும்.

இந்நிலையில் தான் நேற்று திருப்பதியில் உள்ள 4 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்பது விடுக்கப்பட்டுள்ளது. அதாவது திருப்பதியில் உள்ள 3 ஹோட்டல்கள் மற்றும் திருச்சனூரில் உள்ள ஒரு ஹோட்டல் என்று மொத்தம் 4 ஹோட்டல்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலையில் வந்த இந்த இ-மெயிலில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடித்து சிதறும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக்கின் பெயர் இடம்பெற்றுள்ளது. அதாவது ஜாபர் சாதிக் கைது நடவடிக்கையை தொடர்புப்படுத்தி தான் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் 4 ஹோட்டல்களுக்கும் சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.
ஹோட்டல்களில் தங்கியிருந்த பொதுமக்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்ட பிறகு அனைத்து இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் ஹோட்டல்களில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், அது வெறும் புரளி என்பதும் தெரியவந்தது. ஜாபர் சாதிக் பெயரில் வந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான இ-மெயில் குறித்த பிற விபரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.
மேலும் ஜாபர் சாதிக் பெயரில் இப்படி வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் செல்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பெங்களூரில் உள்ள பிரபலமான கல்லூரிகள், ஹோட்டல்களுக்கு ஜாபர் சாதிக் பெயரில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் என்பது விடுக்கப்பட்டு இருந்தது. ஜாபர் சாதிக் யார் என்றால் திமுகவின் முன்னாள் நிர்வாகி ஆவார். சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தார்.
ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்திய வழக்கில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை சாந்தோம் பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் தயாரிப்பாளராகவும், உணவு பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலையும் செய்து வந்தார். டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் அவரது குடோனில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் ஏற்றுமதி செய்யப்படுவது தெரியவந்தது. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு அங்கிருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இதையடுத்து திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தற்போது சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கின் பெயரில் திருப்பதியில் 4 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்பது விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications