சேகர் ரெட்டி என்ற A.J.சேகர் கட்டிக்கொடுத்த கோ மந்திரம்... திறந்து வைக்கும் ஆந்திர முதல்வர் ஜெகன்..!
திருப்பதி: பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி என்றழைக்கப்படும் ஏ.ஜே.சேகர் கட்டிக்கொடுத்துள்ள கோ மந்திரத்தை திருப்பதியில் இன்று மாலை திறந்து வைக்கிறார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி.
திருப்பதி ஏழுமலையான் கோயில் மலையடிவாரத்தில் உள்ள அலிபிரிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோ மந்திரமானது, பல கோடி ரூபாய் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகம் -ஆந்திரா என இரண்டு மாநிலங்களிலும் அரசுக்கு தன்னை நெருக்கமானவராக காட்டிக்கொள்ளும் சேகர் ரெட்டி என்ற ஏ.ஜே.சேகர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் எம்ஜிஆர், சிவாஜி நடித்த நாடக கொட்டகை ஆக்கிரமிப்பு.. மீட்க அமைச்சர் சேகர் பாபு உறுதி

ஏ.ஜே. சேகர்
திருப்பதி திருமலை தேவஸ்தான தமிழக ஆலோசனைக் குழு தலைவராக இருப்பவர் ஏ.ஜே. சேகர். இவர் பெயர் சேகர் ரெட்டி என்று இருந்த நிலையில் நியூமராலஜி காரணமாக ஏ.ஜே.சேகர் என அண்மையில் திருத்திக்கொண்டார். திருப்பதி திருமலை தேவஸ்தான முன்னாள் அறங்காவல் குழு உறுப்பினராக இருந்த ஏ.ஜே. சேகர் ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை அனுமதியின் பேரில் திருப்பதி அலிபிரிவில் பசுக்களுக்கான பிரத்யேக கோயிலை உருவாக்கியுள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி
இதனை ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை அழைத்து வந்து இன்று மாலை திறப்பு விழா நடத்துகிறார் ஏ.ஜே.சேகர். அதில் திருப்பதி தேவஸ்தான போர்டு தலைவர் சுப்பாரெட்டி, ஆந்திர இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வெல்லம் பள்ளி ஸ்ரீநிவாஸ் ஆகியோரும் பங்கேற்கின்றனர். ஓரிரு வருடங்களுக்கு முன்பு வழக்குகளில் சிக்கி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிய இவர், இப்போது ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ளார்.

தமிழக வி.ஐ.பி.க்கள்
திருப்பதி கோயில் மேம்பாட்டுக்கு முழு கவனம் செலுத்தி அது தொடர்பான பணிகளை செய்து வருகிறார். திருப்பதி திருமலை மலையடிவாரத்தில் பிரம்மாண்டமான கோ மந்திரம் அமைக்க வேண்டும் என்பது இவரது நீண்ட நாள் ஆசையாக இருந்த நிலையில், இப்போது அது நிறைவேறியுள்ளது. பசுக்களுக்கான கோயில் திறப்பு விழாவுக்கு தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், வி.ஐ.பி.க்கள் சிலருக்கும் ஏ.ஜே.சேகர் அழைப்பு விடுத்துள்ளார்.

பசு கோயில்
இதனிடையே பசு கோயிலில் தானியங்கள் அல்லது அவரவர் விரும்பும் பொருட்களை பசுவின் எடைக்கு நிகராக கோ துலாபாரம் வழங்கலாம் எனவும் பக்தர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார் ஏ.ஜே. சேகர். திருப்பதி ஏழுமலையான தரிசிக்க வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் இனி இந்த கோயிலுக்கும் சென்று கோ துலாபாரம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications