அது என்ன டீ ஆ? இல்லை சிலுவையா? ஒரு கப்புக்கு இவ்வளவு அக்கப்போரா? திருப்பதி கோவிலில் பரபரப்பு
திருப்பதி: ஏழுமலை கோயில் அமைந்துள்ள திருப்பதி மலையில் சிலுவை சின்னம் பொறிக்கப்பட்ட கப்பில் டீ விற்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
சுமார் 1200 ஆண்டுகள் பழமையான இக்கோயிலை கடந்த 1933ம் ஆண்டிலிருந்து திருப்பதி தேவஸ்தானம் பராமரித்து வருகிறது. ஏழுமலை சூழ இக்கோயில் அமைந்திருக்கும் நிலையில், திருப்பதி மலையில் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் பிரசாரம் செய்யக்கூடாது போன்ற கறாரான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன.

இந்நிலையில் இம்மலையில் உள்ள டீக்கடை ஒன்றில் சிலுவை சின்னம் பொறிக்கப்பட்ட டீ கப் மூலம் டீ விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து தேவஸ்தான விஜிலென்ஸ் அமைப்பினர் உடனடியாக ரெய்டில் இறங்கினர். சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்ற அதிகாரிகள் டீ கப்புகளை கைப்பற்றி இந்த கப்புகள் எங்கிருந்து வாங்கப்படுகின்றன? என கேள்வியெழுப்பினர். இதனையடுத்து டீக்கடை உரிமையாளர் கொடுத்த முகவரியில் உள்ள மொத்த விற்பனை கடையில் அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
அங்கு இதேபோன்று சிலுவை உருவம் பொறிக்கப்பட்ட ஏராளமான டீ கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கப்புகள் எங்கிருந்து பெறப்பட்டன? திட்டமிட்டு விநியோகிக்கப்படுகிறதா? இதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா? இதன் பின்னால் இருப்பவர்கள் யார் யார்? என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும் கடை உரிமையாளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பதி மலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. வாட்டர் பாட்டில் கூட அங்கு பிளாஸ்டிக்கில் விற்பனை செய்யப்படுவது கிடையாது மாறாக கண்ணாடி பாட்டில்களில்தான் விற்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகள் காரணமாக டீ கடைகளில் பேப்பர் கப்புகளின் பயன்பாடுகள் கணிசமான அதிகரித்தன. இந்த அதீத தேவைகளை பயன்படுத்திக்கொண்டு இதுபோன்ற சர்ச்சைகள் உருவாக்கப்படுவதாக உள்ளூர் வியாபாரிகள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications