திருப்பதி ஏழுமலையானுக்கு ஆகஸ்ட் மாதத்தில் அள்ளிக்கொடுத்த பக்தர்கள்..எத்தனை கோடி தெரியுமா?
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் முதல்முறையாக ஆகஸ்ட் மாதத்தில் ரூ.140.34 கோடி காணிக்கை கிடைக்க பெற்றுள்ளது. கோயிலில் ஆகஸ்ட் மாதத்தில் 22.22 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து ரூ.140.34 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
இந்தியாவின் பணக்கார கடவுளான ஏழுமலையானை திருப்பதி சென்று தரிசனம் செய்தால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாகவே தினசரியும் பல லட்சம் பேர் திருமலைக்கு வருகை தருகின்றனர். விவிஐபிக்கள் முதல் சாதாரண ஏழை மக்கள் வரை ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர்.
கொரோனா காலத்தில் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்த முடியாத பணத்தை எல்லாம் தற்போது உண்டியல் செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர் பக்தர்கள். இந்த வருமானம் அனைத்தும், ஏழுமலையான், தன் திருமணத்தின் போது, குபேரனிடம் பெற்ற கடனுக்கான வட்டியாக செலுத்தப்படுவதாக பல ஆண்டுகளாக, பக்தர்களால் நம்பப்படுகிறது.

ஏழுமலையான் கோவில் வருமானம்
ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை ஒவ்வொரு மாதமும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதுதவிர, பக்தர்கள் செலுத்தும் முடி காணிக்கை, தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கும் விடுதிகள் மூலமும் தேவஸ்தானத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது.

உண்டியல் காணிக்கை
கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து ஆறு மாதங்களாக ஏழுமலையானுக்கு ஒவ்வொரு மாதமும் 100 கோடி ரூபாய்க்கும் அதிக தொகையை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர் .கடந்த மே மாதம் 130 கோடியே 5 லட்சம் ரூபாய் ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைத்திருந்தது. இதுவே கடந்த மாதம் வரை ஏழுமலையானுக்கு ஒரே மாதத்தில் கிடைத்த அதிக காணிக்கை வருமானமாக இருந்து வந்தது.

ஜூலையில் 139 கோடி வருமானம்
கடந்த ஜூலை மாதம் ஏழுமலையானுக்கு பக்தர்கள் 139 கோடியே 45 லட்ச ரூபாயை கோவில் உண்டியலில் காணிக்கையாக அளித்து உள்ளனர். இதன் மூலம் தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த ஒரே மாதத்தில் ஏழுமலையான் உண்டியல் அதிக காணிக்கையை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அள்ளிக்கொடுத்த பக்தர்கள்
ஆகஸ்ட் மாதத்தில் ரூ.140.34 கோடி காணிக்கை கிடைக்க பெற்றுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வரலாற்றில் முதல்முறையாக ஆகஸ்ட் மாதத்தில் 22.22 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து ரூ.140.34 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

பிரம்மோற்சவம்
இந்த மாதம் இறுதியில் திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. புரட்டாசி மாதத்தில் தமிழக பக்தர்கள் ஏராளமானோர் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் அந்த மாதத்தில் உண்டியல் காணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications