திருப்பதி நவம்பர் மாத தரிசன டிக்கெட்.. பக்தர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
திருப்பதி: திருப்பதி திருமலையில் நவம்பர் மாதத்திற்கான சிறப்பு விரைவு தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியிடப்படும் தேதிகள் குறித்த அறிவிப்புகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஏழுமைலான் ஆர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்கள், பண்டிகைக் காலங்களில் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இங்குவரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி, நாணயம், பணம் என காணிக்கையாகச் செலுத்துவர்.

திருப்பதி வந்தால் திருப்பம் கிடைக்கும் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் பெற்றுச் செல்வது வழக்கம். திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் மலைப்பாதை படிக்கட்டுகள் வழியாக நடந்தும், மலைப்பாதை சாலை வழியாக வாகனங்களில் பயணித்தும் செல்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 மாதங்களுக்கு முன்பே சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த டிக்கெட்டுகளும் வெளியிடப்பட்ட குறைந்த சில மணி நேரங்களிலேயே முடிவடைந்துவிடும்.
தேவஸ்தானம் எந்த தேதியில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் உள்ளிட்ட பிற சேவைகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்பதை 90 நாட்களுக்கு முன்னதாகவே அறிவிப்பது வழக்கம். அதன்படி, நவம்பர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், தங்குமிடம், தன்னார்வ சேவைக்கான ஆன்லைன் ஒதுக்கீட்டையும் வெளியிடவுள்ளது. அதன்படி, நவம்பர் மாதத்துக்கான இணையதள முன்பதிவு ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கான மின்னணு டிக்கெட்டுகளுக்கு 19 ஆம் தேதி காலை 10 மணி முதல் 21 ஆம் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ஹர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகள் மற்றும் நவம்பர் 9 ம் தேதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் புஷ்பயாகம் சேவை டிக்கெட்டுகள் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். மெய்நிகர் சேவை டிக்கெட்டுகள் அதே நாளில் மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.
அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் வரும் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளை முன்பதிவு டிக்கெட்டுகள் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. முதியோர், மாற்றுத் திறனாளிகள் போன்றவர்களுக்கான டிக்கெட்டுகள் 23 ஆம் தேதி மாலை 3 மணிக்கும், நவம்பர் மாத சிறப்பு விரைவு தரிசன 300 ரூபாய் டிக்கெட்டுகள் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கும் வெளியிடப்படும்.
அதேபோல, திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் ஒதுக்கீடு முன்பதிவுக்கான டிக்கெட் 24 ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். ஆகஸ்ட் 27 ம் தேதி திருமலை - திருப்பதி ஸ்ரீவாரி சேவை ஒதுக்கீடு காலை 11 மணிக்கும், நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை மதியம் 1 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும். பக்தர்கள் தேவஸ்தான இணையதளம் மூலம் (ttdevasthanams.ap.gov.in) ஆர்ஜித சேவைகள், தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications