ரிதன்யா கணவரின் ஜாமீன் மனு ஜூலை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.. திருப்பூர் நீதிமன்றம் உத்தரவு
திருப்பூர்: வரதட்சணைக் கொடுமையால் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிதன்யாவின் கணவருக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று அவரது பெற்றோர் கோரி வருகின்றனர். இந்நிலையில், ரிதன்யாவின் கணவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனுவை ஜூலை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகளான 27 வயது ரித்தன்யாவுக்கும், திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணன் என்பவரது மூத்த மகன்வழிப் பேரன் கவின் குமார் என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

திருமணமாகிய நாளில் இருந்தே கணவர் கவின்குமாரும், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி, தாய் சித்ராதேவி ஆகியோர் தொடர்ந்து ரிதன்யாவை சித்திரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக யாரிடமும் கூறாமல் இருந்து வந்த ரிதன்யா தொடர்ந்து மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் கோவிலுக்குச் சென்று வருவதாக கூறிவிட்டு ரிதன்யா தனது காரில் மொண்டிபாளையம் கோயிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது, வழியில் சாலையோரம் காரை நிறுத்திய அவர் தனது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோக்களை அனுப்பியுள்ளார். அதில், தொடர்ந்து கவின் குமாரும் அவரது பெற்றோரும் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தி வருகின்றனர் என்றும், கொடுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே தன்னை திருமணம் செய்துள்ளனர்.
தொடர்ந்து கவின்குமாருடன் வாழ விரும்பவில்லை. அந்த அளவுக்கு தைரியமான பெண் இல்லை நான். வேறு ஒருவருடன் வாழ்க்கையைத் துவக்கவும் தனக்கு விருப்பமில்லை. எனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, தான் கொண்டு வந்திருந்த தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சி மருந்தை உட்கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, கவின்குமார், ரிதன்யாவின் மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, கவின்குமார், ஈஸ்வரமூர்த்தியை போலீஸார் கைது செய்தனர். மாமியாரையும் கைது செய்ய வேண்டும் என்று ரிதன்யா குடும்பத்தினர் கோரி வருகின்றனர்.
மேலும், இவர்களுக்கு ஜாமீன் அளிக்க கூடாது என்றும், சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும் என்றும் ரிதன்யாவின் குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரிதன்யாவின் கணவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு ஜூலை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிதன்யாவின் பெற்றோர் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ரிதன்யாவின் கணவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு ஜூலை 7 ஆம் தேதிக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
