திருப்பூரில் பயங்கரம்.. அரசு பஸ் - கார் மோதல்.. 3 மாத குழந்தை உள்பட ஒரே குடும்பத்தின் 5 பேர் பலி
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே இன்று அதிகாலையில் அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 மாத குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவில் வெள்ளகோவில் அருகே ஓலப்பாளையம் கிராமம் உள்ளது. இன்று அதிகாலையில் ஓலப்பாளையத்தில் பயங்கர விபத்து நடந்தது.

திருப்பூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் முற்றிலுமாக நொறுங்கியது. பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
மேலும் இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். ஒருவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. திருப்பூர் நல்லிக்கவுண்டன் நகரை சேர்ந்த சந்திரசேகர் (வயது 60), அவரது மனைவி சித்ரா (57), இளைய மகன் இளவரசன் (26), மூத்த மகன் சசிதரனின் மனைவி அரிவித்ரா (30), சசிதரன் -அரிவித்ரா தம்பதியின் மூன்று மாத பெண் குழந்தை சாக்சி உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. மேலும் சசிதரன் படுகாயமடைந்து மருத்துவ சிகிச்சையில் இருப்பது தெரியவந்தது.
அதோடு இவர்கள் திருக்கடையூர் கோவிலுக்கு காரில் சென்று திருப்பூர் திரும்பி வந்தபோது விபத்தில் சிக்கி பலியானதும் தெரியவந்துள்ளது. அதாவது சந்திரசேகரின் 60 வது பிறந்தநாளையொட்டி அவர் தனது மனைவி, 2 மகன்கள், மருமகள், பேத்தியுடன் காரில் திருக்கடையூர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். தரிசனத்தை முடித்து ஊர் திரும்பும்போது இந்த கோர விபத்தில் சிக்கி உள்ளனர்.
இதுதொடர்பாக அரசு பஸ் டிரைவரான கரூர் மாவட்டம் மாணிக்கபுரத்தை சேர்ந்த சாமிநாதன் (வயது 51) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்துக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக கோவை- திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பொக்லைன் வாகனத்தின் உதவியுடன் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்திய நிலையில் மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கியது. அரசு பஸ்-கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications