இந்தி கத்துக்குறதுல என்ன தப்பு? நீங்க 'பேக்கு'.. அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பேச்சு.. பெரும் சர்ச்சை
திருப்பூர்: இந்தி திணிப்புக்கு எதிராக நேற்று (அக்.18) சட்டப் பேரவையில் திமுக அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் இந்த தீர்மானத்திற்கு பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், மாணவர் அமைப்புகள் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிலையங்களில் இந்த போராட்டம் நடைபெற்றன.
இதில் அவிநாசி பள்ளியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அப்பள்ளியின் தலைமையாசிரியர் மும்மொழிக்கு எதிராக போராடுபவர்களை தரக்குறைவாக பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.
தூத்துக்குடி 'ஜாலியன் வாலாபாக்' படுகொலைகளுக்கு எடப்பாடி பழனிசாமிதான் முழுப் பொறுப்பு: வைகோ காட்டம்

அறிக்கை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி நாடாளுமன்ற குழு சமீபத்தில் குடியரசுத் தலைவரிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த அறிக்கையில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஎம்எம், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் இந்தியே கட்டாய பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை இடம்பெற செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்ததாக தகவல்கள் வெளியாகின.

தீர்மானம்
இந்த அறிக்கைக்கு இந்தி பேசாத மாநிலங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு மேலெழுந்து. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்த பரிந்துரைகள் அனைத்தும் நமது அரசியலமைப்பின் கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிரானவை என்றும், நாட்டின் பன்மொழி கட்டமைப்புக்கு தீங்கு விளைவிப்பவை எனவும் விமர்சித்திருந்தார். இது தொடர்பாக பிரதமருக்கு கடிதமும் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்தி மொழி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் நேற்று (அக்.18) தீர்மானம் ஒன்றை முன்மொழிந்திருந்தார். இந்த தீர்மானத்திற்கு பாஜக தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

போராட்டம்
இந்நிலையில், இந்தி மொழி திணிப்புக்கு எதிராக 'இந்திய மாணவர் சங்கம்' (SFI) எனும் அமைப்பு நாடு முழுவதும் தேசிய அளவில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் பல்வேறு கல்வி நிலையங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில், "இந்தி திணிப்புக்கு எதிராக அனைத்து மாநில அரசுகளும் குரல் கொடுக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் தங்களது சட்டப்பேரவையில் மத்திய அரசின் இந்த முயற்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இந்திக்கு ஆதரவாக ஆசிரியர்
ஏற்கெனவே 'நீட்' தேர்வு மூலம் பல உயிர்களை மத்திய அரசு பலிவாங்கியுள்ளது. இதனையடுத்து தற்போது இந்தி மொழியை திணிப்பதன் மூலம் மாநில அரசுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உள்ள குறைந்தபட்ச உரிமைகளையும் பறிக்க முயற்சிக்கின்றனர்." என்று குற்றம்சாட்டி முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தன் கடுமையாக சாடியுள்ளார்.

வீடியோ
அதாவது "மும்மொழிக் கொள்கையையும், இந்தியையும் பேக்குகள்தான் எதிர்ப்பார்கள்" என்று விமர்சித்துள்ளார். இந்தி திணிப்புக்கு எதிராக மாநில அரசு சட்டப்பேரவையில் தீர்மானத்தையே நிறைவேற்றியுள்ள நிலையில், அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் வெளிப்படையாக இந்தி திணிப்புக்கு ஆதரவாக பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மத்தியில் அரசின் கொள்கைக்கு எதிரான கருத்துக்களை தலைமை ஆசிரியர் பேசியுள்ளது வீடியோவாக சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்த ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.