அசாம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. 3 பேர் கைது.. தட்டிய தூக்கிய திருப்பூர் மகளிர் போலீஸ்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, வீட்டில் தனியே இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த திருமணமான பெண்ணை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அதே மாநிலத்தை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எம் ஊத்துக்குளி பகுதியில் பிரபல டைல்ஸ் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த திரிபுல் இஸ்லாம் என்பவர், தனது 21 வயது மனைவியுடன் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு திரிபுல் இஸ்லாம் வேலைக்கு சென்று விட்ட நிலையில், அந்நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள வீட்டில் அவரது மனைவி மட்டும் தனியே இருந்துள்ளார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களான அமருள் இஸ்லாம், அனீப் அலி, இப்ராஹிம் அலி ஆகிய மூவரும் திரிபுல் இஸ்லாம் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
வீட்டினுள் புகுந்து தனியே இருந்த திரிபுல் இஸ்லாம் மனைவிக்கு, இவர்கள் பாலியல் பலாத்கார தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவர்கள் மூன்று பேரும் அங்கிருந்து ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சக தொழிலாளர்கள் அங்கு விரைந்து சென்று பெண்ணை மீட்டு, உடனே பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மகளிர் காவல் ஆய்வாளர் பர்வீன் பானு தலைமையில் ஆன போலீசார், அப்பெண்ணை மீட்டு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சையும் பரிசோதனையும் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் வாக்குமூலத்தின் பேரில் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார், வீட்டில் தனியே இருந்த அசாம் பெண்ணுக்கு பாலியல் பலாத்கார தொல்லை கொடுத்த புகாரின் பேரில் அமருள் இஸ்லாம்,அனீப் அலி, இப்ராஹிம் அலி ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பல்லடம் அருகே வீட்டில் தனியே இருந்த திருமணமான அசாம் மாநில பெண், அதே மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications