பிள்ளையார் கோயிலுக்கு ரூ.6 ட்சம் நிலம் தந்த இஸ்லாமியர்கள்.. பூரித்த இந்துக்கள்.. மகிழ்ந்த திருப்பூர்
திருப்பூர்: திருப்பூரில் இஸ்லாமியர்கள் செய்த காரியம், ஒட்டுமொத்த தமிழக மக்களையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.. என்ன நடந்தது திருப்பூரில்?
திருப்பூர் மாவட்டம் படியூர் அடுத்துள்ளது ஓட்டப்பாளையம்.. இங்குள்ள ரோஸ் கார்டன் பகுதியில், சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.. இந்து - முஸ்லிம் என இரு சமூக மக்களுமே இந்த ரோஸ் கார்டன் பகுதியில், பல காலமாகவே ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள்..

இங்கு இஸ்லாமியர்களுக்கென பள்ளி வாசல் தனியாக உள்ளது.. ஆனால், இந்து மக்களுக்கு வழிபாடு செய்வதற்கு கோயில் எதுவும் இல்லை.. அதனால், தங்களுக்கென விநாயகர் கோயில் ஒன்றினை கட்ட வேண்டும் என்று இந்து மக்கள் முடிவு செய்தார்கள்.. ஆனால், அதற்கு போதுமான இடம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது.
தானம்: இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அந்த பகுதி இஸ்லாமியர்கள், இந்து கோயில் கட்டுவதற்காக, தங்களது நிலத்தை வழங்க முடிவு செய்தனர்.. அதுவும் தானமாக வழங்க முடிவு செய்தனர்.
அதே பகுதியில் ஆர்எம்ஜே ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை கோவில் கட்டுவதற்காக தானமாக வழங்கினர். இந்த நிலத்தின் மதிப்பு, சுமார் 6 லட்சம் ரூபாயாம்..

விறுவிறு பணிகள்: இந்த இடத்தை தானமாக வழங்கியதையடுத்து, கோவில் கட்டும் பணிகளும் ஜரூராக நடந்து வந்தது.. இறுதியில், அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், நேற்று அந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போது இஸ்லாமியர்கள் பள்ளிவாசலிலிருந்து, 7 தட்டுகளில் சீர்வரிசை பொருட்களை எடுத்துக்கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து கோவிலுக்கு வழங்கினார்கள்.. கோயிலுக்கு வருகை இஸ்லாமியர்களுக்கு, இந்து மக்கள் உற்சாக வரவேற்பு தந்து அவர்களை உபசரித்தனர்.. இறுதியில் கும்பாபிஷேக விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதான விழாவையும், இஸ்லாமியர்களே ஏற்பாடு செய்திருந்தனர்.

அன்னதானம்: விநாயகர் கோவில் கட்டுவதற்கு தேவையான நிலத்தினை, இஸ்லாமிய மதத்தினர் தானமாக தந்ததுடன், சீர்வரிசையும் தந்து, அன்னதானத்தையும் வழங்கி சிறப்பித்தது, அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மதங்களை முன்வைத்து, ஒருசிலர் அரசியல் லாபம் பார்த்து வரும் இன்றைய சூழலில், அனைத்துவிதமான பாகுபாடுகளையும் உடைத்தெறிந்து, "அனைவரும் சகோதரர்களே" என்ற உண்மையை உலகுக்கு அன்பின் மூலம் விதைத்து கொண்டிருக்கிறார்கள் இந்து - முஸ்லிம் சமூகத்தினர்.. அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்..!!!












Click it and Unblock the Notifications