துணை முதல்வருக்கு நிகராக உதயநிதி ஸ்டாலின்! அன்பில் மகேஷ் பேச்சை வழிமொழிந்த வெள்ளக்கோவில் சாமிநாதன்!
திருப்பூர்: துணை முதலமைச்சர் பொறுப்புக்கு நிகராக உதயநிதி ஸ்டாலின் செயலாற்றுகிறார் என்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பேச்சை தாம் வழிமொழிவதாக அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுத்தால் கூட அதில் தவறேதும் இல்லை என்பதை அவர் உணர்த்தியுள்ளார்.
2 நாட்களுக்கு முன்னர் திருச்சியில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில், உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வருக்கு நிகராக அமைச்சர் அன்பில் மகேஸ் உயர்த்தி பேசியது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின்
சினிமா தயாரிப்பு, நடிப்பு என்றிருந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார். அதைத் தொடர்ந்து திமுக இளைஞரணிச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், என படிப்படியாக அரசியலில் வளர்ந்து வந்த அவர் இப்போது அமைச்சராகவும் ஆகிவிட்டார். இனி அவருக்கான புரோமோஷனாக பார்க்கப்படுவது துணை முதலமைச்சர் பதவி தான். இதை வைத்து தான் இப்போது டாக் ஓடிக்கொண்டிருக்கிறது.

திருச்சியில் பேச்சு
2 நாட்களுக்கு முன்னர் திருச்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையை நிர்வகிப்பது என்பது கிட்டதட்ட துணை முதலமைச்சர் பொறுப்பை கையாள்வதற்கு சமமானது எனக் கூறி உதயநிதி ஸ்டாலினை வரவேற்றார். அமைச்சர் அன்பில் மகேஸின் இந்தப் பேச்சு அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் சாமிநாதன்
துணை முதல்வருக்கு நிகராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார் என அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதை எப்படி பார்க்கிறீர்கள் என்றும் இதில் உங்கள் கருத்து என்னவென்றும் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர், துணை முதலமைச்சர் பொறுப்புக்கு நிகராக உதயநிதி ஸ்டாலின் செயலாற்றுகிறார் என்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பேச்சை தாம் வழிமொழிவதாக தெரிவித்துள்ளார்.

பெருகும் ஆதரவு
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என அமைச்சர்கள் பலரும் கடந்த பல மாதங்களாக மேடைதோறும் முழங்கி வந்த நிலையில், இப்போது துணை முதலமைச்சர் பதவி குறித்தான பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதனிடையே உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டுள்ள துறைகளில் அவரது செயல்பாடுகள், நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் கூர்ந்து கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications