திருப்பூரில் போனை எடுக்காத மாரியம்மாள்.. சந்தேகப்பட்டு போய் பார்த்தால்.. உடுமலையை உலுக்கிய சம்பவம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த மாரியம்மாள் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மாரியம்மாள் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச்சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள கிராமம் பள்ளபாளையம் . இந்த ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி திருமுருகன் நகர். இங்கு செந்தில்குமார் (வயது 50). இவரது மனைவி மாரியம்மாள் (45) தம்பதி வசித்து வந்தார்கள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூரில் கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர்.

செந்தில்குமார் கட்டிட வேலை செய்து வருகிறார். செந்தில்குமார் தினமும் காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம். அப்படித்தான் கடந்த அக்டோபர் 28ம் தேதி காலையில் செந்தில்குமார் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். இதனால் மாரியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் தனது இளைய மகளிடம் மாரியம்மாள் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன் பின்னர் செந்தில்குமார் தொடர்பு கொண்டபோது மாரியம்மாள் செல்போனை எடுக்கவில்லை. நீண்ட நேரம் போன் செய்தும் மாரியம்மாள் எடுக்காததால் சந்தேகம் அடைந்த செந்தில்குமார் பக்கத்து வீட்டு பெண்ணிடம் பேசி வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த பெண் மாரியம்மாளின் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு மாரியம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுப்பெண் உடனடியாக செந்தில்குமாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் இரவு சுமார் 8.30 மணியளவில் வீட்டுக்கு பதறிஅடித்தபடி ஓடிவந்த செந்தில்குமார், மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். மாரியம்மாள் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து தளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் மாரியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் உடனடியாக வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளார்கள்.
இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மாரியம்மாள் எதற்காக கொலை செய்யப்பட்டார்?, கொலையாளிகள் யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். அத்துடன் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செயதார்கள். இதில் மர்ம ஆசாமி ஒருவரின் உருவம் பதிவாகி இருப்பதை கண்டனர்.. அவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து தனியிடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். வீட்டில் தனியாக இருந்த பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications