காரில் கட்டு கட்டாக 10 கோடி.. சிக்கும் "முக்கிய புள்ளி.." திருச்சி சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி
திருச்சி: திருச்சி அருகே காரில் பல கோடி கடத்தப்பட்ட வழக்கில் தினம் தினம் புது திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
திருச்சி - கரூர் சாலை பெட்டவாய்த்தலை பகுதியில் சில தினங்கள் முன்பு நடைபெற்ற சம்பவத்தை மறந்திருக்க மாட்டீர்கள். ஆம்.. முட் புதரில் வீசப்பட்ட கட்டுகட்டான பணம் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.
நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் அப்போது உடனிருந்தனர். காரில் பணத்தை கடத்தி வந்தபோது, போலீசை பார்த்ததும், அதை முட்புதரில் வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

நடந்தது என்ன
இதை பார்த்து சுங்கச்சாவடி பகுதியிலிருந்து, போலீசாருக்கு தகவல் சென்றது. போலீசாரும் பறந்து வந்துள்ளனர். இதை பார்த்த ரவுடி கும்பல் ரூ.7 கோடியை தூக்கிக் கொண்டு ஓடிவிட்டதாம். 1 கோடியை முட்புதரில் வீசியுள்ளனர், பணத்தை எடுத்துச் சென்றவர்கள். ஆனால் போலீஸ் நெருங்கிவிட்டதால் 2 கோடியை காருக்குள் வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இதுதான் நடந்துள்ளது.

தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை
போலீசார் முட்புதரில் வீசிய 1 கோடி, காருக்குள் இருந்த 2 கோடி என மொத்தம், ரூ.3 கோடி பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பணத்தை கடத்தியது யார் என்பதை விசாரிப்பதில் திருச்சி போலீசார் சுணக்கம் காட்டியுள்ளனர். வருவாய் துறையும் ஒத்துழைக்கவில்லை. அதிருப்தியடைந்த தேர்தல் ஆணையம், கலெக்டராக இருந்த சிவராசு, ஸ்ரீரங்கம் துணை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, போலீஸ் எஸ்.பி ராஜன் ஆகியோரை பணியிட மாற்றம் செய்தது. புதிய கலெக்டராக திவ்யதர்ஷினி, எஸ்.பி,யாக மயில்வாகனன் நியமிக்கப்பட்டனர்.

முசிறி பிரமுகர்
இதன்பிறகு விசாரணை சூடுபிடித்தது. புதிய காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் விசாரணையில் புது புது தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த கார், முசிறி எம்எல்ஏ செல்வராஜின் மகன் ராமமூர்த்திக்கு சொந்தமானது என்பதும், காரில், முசிறி அதிமுக பிரமுகர்கள் ரவிச்சந்திரன், சத்தியராஜா, எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், ஓட்டுனர் சிவகுமார் ஆகியோர் இருந்ததும் தெரியவந்தது.

ரவுடி கும்பல்
ஆனால் அது எங்கள் பணமே அல்ல என்று அவர்கள் போலீசில் கூறிவிட்டனர். ஆனால், திருச்சியைச் சேர்ந்த, ஒரு அமைச்சர் வீட்டில் இருந்துதான், இந்த பணம் எடுத்து வரப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. முசிறி வேட்பாளர் செல்வராஜ் செலவுக்காக 10 கோடி அனுப்பப்பட்டதாகவும், ஆனால், அதிமுகவைச் சேர்ந்த மீனவர் அணி மாவட்ட நிர்வாகி சாமி ரவி இந்த தகவலை சிலருக்கு கூறியதாகவும், எனவேதான் ரவுடி கும்பல் காரை மறித்து பணத்தை எடுத்து சென்றதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தலைமறைவு
தற்போது சாமி ரவி தலைமறைவாகிவிட்டார். அவர் போலீசாரிடம் சிக்கும்போது, என்ன சொல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பண மூட்டை பிரச்சினை திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications