நிச்சயம் விடமாட்டோம்..கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை.. சேகர்பாபு வார்னிங்
திருச்சி: தமிழ்நாட்டில் கோவில் நிலங்களில் உள்ள கடைகளின் வாடனை பாக்கி பாரபட்சமின்றி வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ள அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது கண்டிப்பாக கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே பல அமைச்சர் சேகர் பாபு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரது நடவடிக்கைகளைப் பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அமைச்சர் சேகர் பாபு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆய்வு செய்தார். முன்னதாக கோயிலில் அமைச்சருக்குப் பரிவட்டம் காட்டி மரியாதை அளிக்கப்பட்டது.

அதிமுக ஆட்சி
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் கேட்பாரற்று உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் எந்த கோயிலிலும் குடமுழுக்கு உள்ளிட்ட எதுவும் நடைபெறவில்லை. கடந்த 2 மாதங்களாகக் கோயில் பராமரிப்பு பணிகளை விரவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோயில்களில் குடமுழுக்கு
மேலும், மாநிலத்தில் கடந்த 12 ஆண்டுகளாகக் குடமுழுக்கு நடத்தப்படாத கோயில்களைக் கண்டறியும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளோம். அந்தக் கோயில்களில் விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும். அதேபோல கோயில்களில் தற்காலிகமாக பணிபுரிந்தவர்கள் நிரந்தர பணியாளர்களாக மாற்றப்படுவார்கள்.

ஆக்கிரமிப்பு
பல்வேறு இடங்களிலும் கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் கடைகளும், வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. அங்கு இருப்பவர்கள் உரிய மனு அளித்தால் அவர்களை வாடகைதாரர்களாக ஏற்றுக் கொள்வோம். இது தொடர்பான நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றும் அவர் கூறினார்.

கிரிமனல் நடவடிக்கை
முன்னதாக, தமிழ்நாட்டிலுள்ள கோவில்களின் மேம்பாடு மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த சீராய்வு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சேகர் பாபு, "அறநிலையத் துறையில் தான் ஆக்கிரமிப்பு குறித்து அதிக புகார்கள் உள்ளன. கோயில் நிலங்களில் இருக்கும் கடைகளில் வாடகை பாக்கி பாரபட்சமின்றி வசூலிக்கப்படும். மேலும், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கண்டிப்பாக கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications