குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம்
திருச்சி: திமுக கோட்டையாக கருதப்படும் காவிரி படுகையில் இன்று திமுகவின் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் மாநில நிர்வாகிகள் மாநாடு திருச்சி சிறுகனூரில் நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த 110 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றினார். தொடர்ந்து அரை கிலோ மீட்டர் தூரம் ஸ்டாலின் ரேம்ப் வாக் செய்தார். இது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. முதல்வர் ஸ்டாலினும் உற்சாகத்துடன் தொண்டர்களை நோக்கி கையசைத்தப்படி வருகை தந்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்த முறை திமுக 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து இருக்கிறது.

திருச்சியில் பிரமாண்ட மாநாடு
பிரசாரம், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள், தேர்தல் வாக்குறுதிகள் தயாரிப்பு என திமுக படு வேகமாக இயங்கி வருகிறது. முதல்வர் ஸ்டாலினும் மக்கள் சந்திப்பு, கள ஆய்வு என மாவட்ட வாரியாக சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
தேர்தலுக்கு முன்பாக திமுக மாபெரும் மாநாட்டினை நடத்துவது வழக்கம். இதில் குறிப்பாக திருச்சியில் நடத்தப்படும் மாநாடுகள், பொதுக் கூட்டங்கள் திமுகவிற்கு திருப்புமுனையாக அமைந்து வருகிறது. இதன் படியே வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக திருச்சியில் மாநாடு அறிவிக்கப்பட்டது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரில் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டன.
சாரை சாரையாக குவிந்த தொண்டர்கள்
இந்த நிலையில் இன்று மாலை 4 மணியளவில் கலைநிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காலை முதலே சாரை சாரையாக தொண்டர்கள் குவியத் தொடங்கினர். திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு சிறுகனூரில் முகாமிட்டு மாநாட்டுப் பணிகளை பார்வையிட்டு முடுக்கி விட்டு வந்தார்.
முன்னதாக மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நெரிசலின்றி சுலபமாக வந்து செல்லும் வகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று காலை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் ரேம்ப் வாக்
"ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் மாநில மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். மாலை 6.30 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் மாநாட்டுக்கு வருகை தந்தார். அப்போது அவர் 110 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் மாநாட்டு மேடைக்கு வருவதற்காக 500 மீட்டருக்கு அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் வாக்கில் நடந்தே வந்தார். அப்போது தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். ஸ்டாலினும் கையசைத்தப்படி உற்சாகமாக வந்தார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், தொண்டர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்களது வரவேற்பும், உற்சாகமும் எனது வயதை குறைத்துவிட்டது” என்று பேசினார்.












Click it and Unblock the Notifications