எடப்பாடி பழனிசாமியின் தரம் அவ்வளவு தான்! அதிமுக ஆட்சியில் ஸ்டாலின் மீது 100 வழக்குகள்! -கே.என்.நேரு
எடப்பாடி பழனிசாமியின் தரம் பற்றி அமைச்சர் நேரு விமர்சனம்.
திருச்சி: எடப்பாடி பழனிசாமியின் தரத்தை அவரது பேச்சிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
வழக்குப் போட்டால் அதை நீதிமன்றத்தில் சந்திப்பதை விட்டுவிட்டு போராட்டம் நடத்துவதெல்லாம் ஏற்கத்தக்கதல்ல எனக் கூறினார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் ஸ்டாலின் மீது 100 பொய் வழக்குகள் போடப்பட்டதாகவும் அதேபோல் தன்னை போன்ற நிர்வாகிகள் மீது வழக்குகள் போடப்பட்டதாகவும் அமைச்சர் நேரு கூறினார்.

எடப்பாடி பழனிசாமி
மூன்று நாட்களுக்கு முன்னர் சிவகங்கையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, வழக்கம் போல் முதல்வர் ஸ்டாலினை ஒருமையில் விமர்சித்தார். ''நீ கருணாநிதியின் மகன் தான், எங்களுக்கு சந்தேகமில்லை'' என்றெல்லாம் ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி அந்தக் கூட்டத்தில் பேசியது அவருக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பையும், விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.

அமைச்சர் கே.என்.நேரு
இதனிடையே இது குறித்து திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்த அவர், எடப்பாடி பழனிசாமியின் தரத்தை அவரது பேச்சிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் என்றார். எடப்பாடிக்கு அநாகரீகமாக தான் பேசத் தெரியுமே தவிர நாகரீகமாக பேசத் தெரியாது என்றும் வழக்குப் போட்டால் அதை நீதிமன்றத்தில் சந்திப்பதை விட்டுவிட்டு போராட்டம் எதற்கு நடத்த வேண்டும் எனக் கேட்டார்.

100 பொய் வழக்குகள்
அதிமுக ஆட்சிக்காலத்தில் ஸ்டாலின் மீது 100 பொய் வழக்குகள் போடப்பட்டதாகவும் அதேபோல் தன்னை போன்ற நிர்வாகிகள் மீது ஏராளமான வழக்குகள் போடப்பட்டதாகவும் கூறிய அமைச்சர் நேரு, தாங்கள் எல்லாம் முறைப்படி நீதிமன்றத்தில் தான் அதை சந்தித்து வருவதாக கூறினார். எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்துக்கு கே.என்.நேரு தான் பொறுப்பு அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோபம் இல்லை
எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் நேரு கோபமாக பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு தெரிந்தது அவ்வளவு தான் அதைப்பற்றி ஏன் பேசிக்கிட்டு என்பது போல் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.












Click it and Unblock the Notifications