நிறைவேறாத கே.என்.ராமஜெயத்தின் ஆசை! இன்று உயிரோடு இருந்திருந்தால்? மறக்காத அமைச்சர் நேரு ஆதரவாளர்கள்!
திருச்சி: அமைச்சர் கே.என்.நேருவுக்கு அரசியலில் எல்லாமுமாக திகழ்ந்து மறைந்த அவரது தம்பி கே.என்.ராமஜெயத்தின் 62வது பிறந்தநாளான இன்று, அவர் உயிருடன் இருந்திருந்தால் எந்தளவுக்கு வாழ்த்துச் சொல்ல ஆதரவாளர்கள் திரண்டிப்பார்களோ அதே போல் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தவும் திரண்டிருந்தார்கள்.
எந்த விவகாரத்திலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று முடிவு, கட்சிக்காரர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ராமஜெயத்திடமிருந்து பறந்த போன் கால்கள், என கே.என்.ராமஜெயத்தை பற்றி ஏராளமாக கூறலாம்.

கே.என்.ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு 11ஆண்டுகள் உருண்டோடிய நிலையிலும் இன்னும் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் கே.என்.நேரு தான் குடும்பத்திற்கு மூத்த பிள்ளை என்பதால் அவரது தம்பிகளான கே.என்.ராமஜெயம், கே.என்.மணிவண்ணன், கே.என்.ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் அண்ணன் சொல்லை வேத வாக்காக ஏற்று செயல்படக் கூடியவர்கள்.
மற்ற தம்பிகள் எல்லாம் கட்டுமானத் தொழில்களை கவனித்துக் கொண்டு கோவை, சென்னை என செட்டிலாகிவிட, ராமஜெயம் மட்டும் தான் தனது அண்ணன் நேருவுக்கு உதவியாக திருச்சியிலேயே தங்கினார். ராமஜெயத்தை பொறுத்தவரை 5 முதல் 7 மொழிகள் வரை சரளமாக பேசக்கூடியவர். எம்.பி.ஏ.வில் தங்கப்பதக்கம் வென்ற இவர் சிறுவயது முதலே படிப்பில் டாப்பர்.
ஆரம்பக் காலங்களில் போர்வெல் போடும் ஒப்பந்தப் பணிகளை தமிழகம் கடந்து பல்வேறு மாநிலங்களில் எடுத்துச் செய்தவர் பிற்காலத்தில் நாடுகள் கடந்தும் தனது தொழில் சாம்ராஜ்யத்தை பரப்பினார். உள்ளூர் முதல் உலக அரசியல் வரை ஆழமாக பேசக் கூடிய ஆற்றலை பெற்றிருந்த கே.என்.ராமஜெயத்திற்கு, நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என ஆசையும் இருந்தது. ஆனால் கடைசி வரை அது நிறைவேறவில்லை.
ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ராமஜெயம், கோயில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம் என யார் வந்தாலும் நன்கொடையை வாரி வழங்கி வந்தார். நேரு சற்று முன் கோபம் கொண்டவர் என்பதால் அவரை அணுகத் தயங்கும் ஆதரவாளர்கள் பலரும் ராமஜெயத்தை அணுகி காரியம் சாதித்து வந்தனர்.
மிகப் பெரிய கனவோடு திருச்சியில் உலகளாவிய அளவில் தனது கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்த விரும்பிய ராமஜெயம் துரதிர்ஷ்டவசமாக கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். ராமஜெயம் தான் உயிரோடு இல்லையே என்பதற்காக அவரை மறக்காமல் அவரது பிறந்தநாளான இன்று அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் கேர் பொறியியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.












Click it and Unblock the Notifications