ஆப்பரில் தங்கத்தை அள்ளிட்டு போங்க.. ரூ.100 கோடி மோசடி புகாரில் பிரணவ் ஜுவல்லரி மேலாளர்கள் கைது! அதிரடி
திருச்சி: செய்கூலி, சேதாரம் எதுவும் இல்லாமல் நகைகளை வாங்கலாம் என விளம்பரப்படுத்தி மோசடி செய்த குற்றச்சாட்டில் பிரணவ் ஜுவல்லரி மேலாளர்களை போலீசார் இப்போது கைது செய்துள்ளனர்.
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் எப்போதும் முதலில் முதலீடு செய்வது தங்கம் தான். ஆபத்தான காலத்தில் எப்போதும் கை கொடுப்பது தங்கம் என்பதால் ஏழை மக்கள் தங்கள் சேமிப்பைத் தங்கத்திலேயே முதலீடு செய்வார்கள்.

அப்படி இருக்கும் போது, தங்கம் குறித்து கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு மக்களிடம் மோசடி செய்ததாக பிரணவ் ஜுவல்லரி என்ற நகைக்கடை மீது பல்வேறு புகார்கள் கிளம்பியது. இதில் போலீசார் இப்போது முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரணவ் ஜுவல்லரி: திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட இயங்கி வந்த நிறுவனம் பிரணவ் ஜுவல்லரி.. 0% செய்கூலி, சேதாரம் என கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு பலரது கவனத்தையும் ஈர்த்த நிறுவனம் தான் பிரணவ் ஜுவல்லரி. இதனால் மிகக்குறுகிய காலத்திலேயே மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, ஈரோடு, நாகர்கோவில் எனப் பல இடங்களில் பிரணவ் ஜுவல்லரி தங்கள் கிளைகளை ஆரம்பித்தனர்.
மேலும், ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 2% வட்டி வழங்கப்படும்... அப்படியில்லை என்றால் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்க நகைகளை 10 மாதங்கள் கழித்துப் பெறலாம் என்றும் அறிவிப்புகளை வெளியிட்டனர். இது மட்டுமின்றி 11 மாதம் சீட்டு கட்டினால் 12ஆம் மாத தவணையை இலவசம் என்றும் அறிவித்தனர்.
ரூ.100 கோடி மோசடி: இதை எல்லாம் விடப் பழைய நகைகளுக்கு வட்டி செலுத்துவதை விட, எங்களிடம் கொண்டு வந்து கொடுங்கள்.. ஒரு வருடம் கழித்து, எந்த வித செய்கூலி, சேதாரமும் இல்லாமல், பழைய நகையின் எடைக்குச் சமமாக புதிய நகைகளை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர். இந்த அறிவிப்புகளால் பிரணவ் ஜுவல்லரியில் பொதுமக்கள் பலரும் தங்கள் சேமிப்பை முதலீடு செய்தனர்.
பெரும்பாலான மக்கள் ஓராண்டு முடிந்த பிறகு புதிய நகைகளைப் பெற ஆர்வமாகக் காத்திருந்தனர். இருப்பினும், பல இடங்களில் பிரணவ் ஜுவல்லரி தங்கள் கிளைகளை மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகப் பொதுமக்கள் பலரும் போலீசாரிடம் புகார் அளித்தனர். சுமார் 180க்கும் மேற்பட்டோர் பொதுமக்களிடம் புகார் அளித்துள்ளனர். நகை சீட்டு என்று 100 கோடி ரூபாய்க்கு மேலாக மோசடி நடந்ததாகப் புகார்கள் எழுந்த நிலையில், 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலாளர்கள் கைது: புதிய நகைகளைத் தராமல் காலம் கடத்தி வந்ததாகவும் திடீரென நகைக்கடையை இழுத்து மூடிவிட்டுச் சென்றுள்ளதாகப் புகார் அளித்தனர். இதற்கிடையே இன்றைய தினம் பிரண்வ் ஜூவல்லரி நிறுவன நிதி மோசடி தொடர்பாகச் சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதற்கிடையே இப்போது மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நகையைச் சேமிக்கலாம் என்ற பெயரில் விளம்பரப்படுத்தி மோசடி செய்த சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications
