தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது.. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன புதிய தகவல்
திருச்சி : புதுச்சேரியைப் போலவே தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
கொரோனா முதல் அலை பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்று வரை திறக்கப்படவில்லை. எனினும் விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு பிப்வரி வரை 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன.
ஆனால் கொரோனா இரண்டாவது அலை பிப்ரவரியில் இருந்து அதிகரிக்க ஆரம்பித்தால் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. 1 முதல் 12ம் வகுப்பு ஒரு தேர்வு கூட இந்த ஆண்டு நடத்தப்படவில்லை அனைவருமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது என்ற கேள்விகள் எழுந்துள்ளது. மாணவர்கள் தொடர்ச்சியாக ஆன்லைன் மூலம் படித்து வருகிறார்கள். பாதிப்பேருக்கு கூட கல்வி போய் சேரவில்லை. மாணவர்கள் பள்ளிகள் திறக்காத காரணத்தால் கல்வி கற்க முடியாமல் முடங்கி போய் உள்ளனர்.

தனியார் பள்ளிகள்
தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களை நடத்துகின்றன. அரசு பள்ளிகள், கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்துகின்றன. இவற்றின் வழியாக மாணவர்கள் பாடங்களை கற்கிறார்கள். ஆனாலும் கல்வி ஏழை மற்றும் அடித்தட்டு மக்களை போய் சேராத அளவிற்கு கொரோனா முடக்கி உள்ளது.

16 முதல் திறப்பு
கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடைபெறுகிறது. புதுச்சேரியில் முதல் கட்டமாக, மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விரைவில் அங்கு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.
இதற்கிடையே புதுச்சேரியில் வரும் 16-ம் தேதியில் இருந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதேபோல் அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அண்மையில் அறிவித்தார்.

அன்பில் மகேஷ்
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுந்தது. இதுகுறித்து இன்று திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும் போது, "புதுச்சேரியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரியைப் போலவே தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.

முதல்வர் முடிவு செய்வார்
இதுகுறித்து திங்கள்கிழமை அன்று அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தினோம். நாமும் ஏன் பள்ளிகளைத் திறக்கக் கூடாது என்ற வகையில்தான் ஆலோசனை நடத்தினோம். புதுச்சேரி என்ன முடிவு எடுத்திருக்கிறதோ அதை அடிப்படையாகக் கொண்டு, துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனைகளை முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் செல்வோம். இன்றைய கொரோனா சூழலைப் பொறுத்து முதல்வர் என்ன வழி வகைகளைத் தெரிவிக்கிறாரோ, அவற்றைப் பின்பற்றுவோம்" இவ்வாறு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்,.












Click it and Unblock the Notifications