அடுத்த ஊழல் பட்டியலை வெளியே விட்டால்.. தமிழக அரசே கவிழ்ந்து விடுமாம்.. சொல்கிறார் அண்ணாமலை
திருச்சி: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடி பேசினார்.
Recommended Video
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் பாஜகவின் இளைஞர் அணி சார்பில் நாளைய தினம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மற்றும் தேஜஸ்வி சூரியா கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அண்ணாமலை சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் திமுக அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

அண்ணாமலை
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "திரௌபதி முர்மு வெற்றி சமூக நீதியை நிலைநாட்டி இருக்கிறது. திமுக ஆட்சி வந்த பிறகு அவர்கள் செய்திருக்கக் கூடிய ஒரே சாதனை அனைத்து பொருட்களின் விலை ஏற்றம் தான். மனசாட்சி இல்லாத அரசு மக்கள் எவ்வளவு சொன்னாலும், செய்த தவறில் இருந்து பாடத்தை கற்றுக் கொள்வதற்குத் தயாராக இல்லாத அரசாக இருக்கிறது. மக்கள் தான் இந்த அரசைக் கேள்வி கேட்க வேண்டும்.

விலைவாசி உயர்வு
மின் கட்டணம் உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று கூறினார்கள். இதற்கும் செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த பிறகு மின்சார துறை அமைச்சரைக் காணவில்லை. மத்திய அரசின் மீது பழி போடுவது மட்டும்தான் தமிழக அரசின் வேலையாக இருக்கிறது. விலைவாசி உயர்வால் அமைச்சர்களோ மற்றவர்கள்தான் பலனடைவார்களைத் தவிர விவசாயிகள் பயன் அடைவதில்லை. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யக்கூடிய பாலின் விலையை உயர்த்தினால் சந்தோஷமாக வரவேற்கிறோம்.

பழிபோடுகிறது
கார்ப்பரேட் நண்பர்கள் பயன் பெறுவதற்காக இந்த விலை ஏற்றம் செய்யப்படுகிறது. காலையிலிருந்து மாலை வரை விலை உயர்த்துவது மட்டும்தான் இந்த அரசின் வேலையாக இருக்கிறது. எந்த பொருள்களின் விலையை உயர்த்தலாம் என முதலமைச்சர் யோசித்துக் கொண்டிருக்கிறார். அனைத்திலும் திமுக கெட்ட பெயர் வாங்குவதற்குக் காரணம் செயலின்மை தான். பாஜக மீது பழி போட்டுத் தான் திமுக அரசு நடக்கும் என்றால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்றார்.

போலி பாஸ்போர்ட்
திருச்சி மத்தியச் சிறையில் உள்ள சிறப்பு முகாமில் தேசிய புலனாய் முகாமை சோதனை குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அண்ணாமலை, "இன்று காலை தமிழக ஆளுநரைச் சந்தித்து நேரில் பேசினேன். பாஸ்போர்ட் ஊழலில் ஏடிஜிபி சில அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அதற்கான ஆவணங்கள் அனைத்தையும் கொடுத்து வந்துள்ளேன். போலி பாஸ்போர்ட் என்பது இந்தியாவின் இறையாண்மையில் உள்ளது. போலி பாஸ்போர்ட் மூலமாக சமூக விரோதிகள் குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் பல குற்றச் செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை ஆளுநர் கவனத்தில் எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இதில் கடுமையான நடவடிக்கை வரும் என நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கள்ளக்குறிச்சி விவகாரம்
கள்ளக்குறிச்சி தனியார்ப் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மௌனம் காப்பது திமுக தான். அங்குக் கலவரம் நடக்க திமுகவின் மெத்தனம், காவல்துறையின் செயலின்மை தான் காரணம். பாரதிய ஜனதா கட்சியின் அறிக்கை வெளியிட்ட பிறகு தான் சிபிசிஐடி விசாரணை தொடங்கி இருக்கிறது. நான்கு நாட்களாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரைக் காணவில்லை. அவர் எங்குச் சென்றார் என்பதை நீங்க தான் கேட்க வேண்டும்" என்றார்.

ஆட்சி கவிழும்
ஊழல் பட்டியலை வெளியிடுகிறீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "அமைச்சர்கள் ஏதோ வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொந்த ஊருக்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும். பொறுமையாக இருப்போம். அவர்கள் நான்கு வருடம் ஆட்சியில் இருப்போம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். விரைவில் எங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications