திருச்சியில் பேங்க் மேனேஜர் வீட்டுக்குள்ளே யாரு பாருங்க.. உறைந்த உறையூர்.. இது லிஸ்ட்டுலயே இல்லியே
திருச்சி: திருச்சி பேங்க் மேனேஜர், கன்னியாகுமரிக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம்தான் சொந்த ஊர் திரும்பியிருக்கிறார்.. அப்போதுதான், இந்த சம்பவத்தின் அதிர்ச்சியை கண்டு அதிர்ந்து போலீசுக்கு ஓடியிருக்கிறார். உறையூர் போலீசாரும் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 10 நாட்களுக்கு முன்பு ஒரு திருட்டு சம்பவம் நடந்தது.. சித்திரை செல்வின் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் இந்த திருட்டு நடந்தது. இவர் வெளியூருக்கு சென்றிருந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம், ஒன்றரை பவுன் கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு போன்றவை கொள்ளை போயிருந்தன.

இதனால், சித்திர செல்வன், மெஞ்ஞானபுரம் போலீசில் இதுசம்பந்தமாக புகார் தரவும், போலீசாரும் வீட்டிற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் ஒரு கடிதத்தை கண்டெடுத்தனர். அந்த கடிதத்தை, திருடனே எழுதி வைத்துவிட்டு போயிருந்ததும் தெரியவந்தது.
பச்சை எழுத்து: அதில், "என்னை மன்னித்து விடுங்கள்... நான் இன்னும் 1 மாதத்தில் இந்த பணம், நகையை திருப்பி தந்து விடுகிறேன். என் மனைவிக்கு உடம்பு சரியில்லை. மருந்து வாங்க காசில்லை.. எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் மருத்துவச் செலவுக்காக திருடினேன்" என்று எழுதப்பட்டிருந்தது.. பச்சை நிற மை பேனாவால் எழுதிய கடிதத்தை பார்த்ததுமே விக்கித்த போலீசார், அந்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றி, அதிலுள்ள கைரேகையை பதிவு செய்து திருடனை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படித்தான் கேரளாவில் ஒரு திருடன், பூட்டிய வீட்டில் திருட நுழைந்துள்ளான்.. அந்த வீட்டில் திருடுவதற்கு எதுவுமே கிடைக்கவில்லை.. இதனால் கடுப்பான திருடன், "அடுத்த முறை வெளியூர் செல்லும் போது எனக்காக தங்கமும், பணமும் வைத்துவிட்டுச் செல்லுங்கள், இல்லாவிட்டால் அடிக்கடி கதவை உடைக்க வேண்டியது வரும்" என்று கோபமாக எழுதிவைத்து போனான்.
மனக்குமுறல்: இப்படி பூட்டி கிடந்த வீட்டில் கொள்ளையர்கள் நுழைந்து, தங்கள் மனக்குமுறலை எழுதிவைத்து விட்டு போவது அதிகரித்தவாறே உள்ளது.. இதோ பெரம்பலூரில் ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூரில் பெரம்பலூர் புறவழிச்சாலை, செல்வம் நகரை சேர்ந்தவர் இளங்கோ.. இவர் தனியார் வங்கியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.. மனைவி, 2 மகன்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் இளங்கோ.
கன்னியாகுமரி: கடந்த 2 வாரத்துக்கு முன்பு மனைவி, குழந்தைகளுடன் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார் இளங்கோ.. பிறகு நேற்றுமுன்தினம் இரவுதான் துறையூருக்கு திரும்பியிருக்கிறார்..
வீட்டுக்குள் நுழையும்போதே, முன்புற கேட் மற்றும் கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ந்தார். அதேபோல, வீட்டின் போர்டிகோவில் நின்றிருந்த டூ வீலரும் திருடு போயிருந்தது. வீட்டிற்குள் உள்ளே சென்று பார்த்தபோது, ரூமில் இருந்த மர பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது.
மலைத்த இளங்கோ: ஆனால், பீரோவில் நகை, பணம் எதுவுமே இல்லை.. பீரோ இருந்த ரூமின் சுவற்றில், "ஸாரி பிரதர் அண்ட் சிஸ்டர், மன்னிச்சிடுங்க" என்று கிரேயான் பென்சிலால் எழுதப்பட்டிருந்ததை கண்டு மலைத்து நின்றார் இளங்கோ..
அதாவது, வீட்டில் பணம், நகை எதுவும் இல்லாததால், கோபத்தில் பீரோவை உடைத்துவிட்டு, அதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டு சென்றிருக்கிறான் திருடன்.. இதுதொடர்பாக இளங்கோ அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications