யோசிக்காதீங்க.. எனது காரில் ஏற்றுங்க.. ஹாஸ்பிடல் போகலாம்.. திருச்சி கலெக்டர் பிரதீப்பின் மனிதநேயம்!
திருச்சி: விபத்தில் காயமடைந்த தலைமை ஆசிரியை ஒருவரை தனது காரில் மீட்டுச் சென்று உரிய நேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்.
மாவட்ட ஆட்சியர் பிரதீப் நினைத்திருந்தால் வேறு ஏதேனும் ஒரு வாகனத்தையோ அல்லது ஆம்புலன்ஸையோ வரவழைத்து விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்க முடியும்.
ஆனால் அது வரை தாமதிக்க வேண்டாம் என்ற மனிதநேய சிந்தனையோடு தனது இன்னோவா காரிலேயே விபத்தில் சிக்கியவரை மருத்துவமனை அழைத்துச் சென்று ஒரு உயிரை காப்பாற்றியுள்ளார் பிரதீப் குமார்.

திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதிக்கு ஆய்வுக்கு சென்றிருந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், அங்கிருந்து திரும்பும் வழியில் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி காயம் அடைந்தை கண்டிருக்கிறார். இதையடுத்து உடனடியாக தனது காரை நிறுத்தி இறங்கிச் சென்ற மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கியதுடன் உடனடியாக தனது காரிலேயே அவரை ஏற்றிக்கொண்டு சென்று மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

யோசிக்காமல் உதவி
இதையடுத்து உரிய நேரத்தில் மருத்துவர்கள் வழங்கிய சிகிச்சையால் அந்தப் பெண் அபாய கட்டத்திலிருந்து மீண்டார். கலெக்டர் நினைத்திருந்தால் வேறு ஏதேனும் ஒரு வாகனத்தை வரவழைத்தோ அல்லது ஆம்புலன்ஸை கூப்பிடுங்கப்பா எனக் கூறிவிட்டோ சென்றிருக்கலாம். ஆனால் அது போல் செய்யாமல் தனது காரிலேயே விபத்தில் காயமடைந்தவரை ஏற்றிச் சென்றது தான் இங்கு குறிப்பிடத்தக்கது. இருக்கையில் ரத்தமாகும், கழுவ வேண்டுமே என எதைப் பற்றியும் யோசிக்காமல் விலைமதிப்பற்ற மனித உயிர் ஒன்றை அவர் காப்பாற்றியுள்ளார்.

யார் அந்த பெண்?
இதனிடையே கலெக்டரால் உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் விஜயலட்சுமி என்பதும் அவர் திருவெள்ளறை அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருவதும் விசாரணையில் தெரியவந்தது. வழக்கம் போல் பள்ளி முடிந்து நேற்று மாலை வீடு திரும்பிய போது அடையாளம் தெரியாத நபர்களால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.

கலெக்டருக்கு பாராட்டு
இதனிடையே உயிரை காப்பாற்றிய உன்னத சேவைக்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன.


Click it and Unblock the Notifications
