ஜாதி மாறி காதல் கல்யாணம் செய்தவர்கள் கோயிலில் வழிபட அனுமதி மறுப்பு.. விழாக்கள் அதிரடியாக ரத்து
திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே சூரம்பட்டியில் வேறு சமுதாய பெண்களை காதல் கல்யாணம் செய்தவங்களுக்கு கோயிலில் வழிபட அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் இதுபற்றி சர்சையானதால் அவர்கள் கோயில் விழாக்களையும் ரத்து செய்துவிட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.
காதல் திருமணம் செய்தவர்களிடம் குலதெய்வ கோயிலுக்கான வரியை வாங்க மறுத்ததுடன், அவர்களை கோயில் விழாவில் சேர்த்துக்கொள்ளவும் மறுத்துள்ளார்கள் என்று புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக புகாரும் போலீசில் வழங்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சூரம்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு என்று ஒரு கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலில் கடந்த ஜூன் 5ஆம் தேதி அன்று கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காகவும், கோயிலுக்கு வரி கொடுக்கவும் மே மாதம் இதே சமுதாயத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் தாங்களாகவே முன்வந்துள்ளார்கள்.
ஆனால் கோயில் நிர்வாகம் ஐந்து இளைஞர்களும் வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண்களை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளதால் வரி வாங்க முடியாது என்றும் கோயில் விழாவில் சேர்த்துக் கொள்ள முடியாது என்றும் கூறினார்களாம்.
இதையடுத்து, காதல் திருமணம் செய்து கொண்ட 5 இளைஞர்களும் முசிறி காவல் நிலையத்தில் மே 8ஆம் தேதி புகார் அளித்தனர். பின் முசிறி போலீசார் விசாரணை நடத்தி, முசிறி வட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தைக்கு பரிந்துரை செய்து இருதரப்பினரையும் அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து, ஜூன் 2ம் தேதி முசிறி தாசில்தார் பாத்திமா சகாயராஜ் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.
அப்போது கோயில் கும்பாபிஷேகத்தில் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் வழிபாடு செய்வதற்கு ஒப்புக் கொள்வதாகவும், பின்னர் நடைபெற உள்ள பூஜையில், உரிய சடங்குகளுக்கு பின்னர் அவர்களை சேர்த்துக் கொள்வதாகவும் கோயில் நிர்வாக தரப்பில் கூறி உள்ளார்கள். இதையடுத்து கும்பாபிஷேக விழாவில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர்கள் குடும்பத்துடன் சென்று கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து, அன்று (ஜூன் 5) மாலை தேங்காய் பழம் படைப்பதற்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்களுக்கு அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, காதல் திருமணம் செய்த வாலிபர்கள் முசிறி காவல் நிலையத்தில் மீண்டும் வந்து ஜூன் 6ஆம் தேதி புகார் செய்தனர். புகாரின் பேரில் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் கோயிலில் தேங்காய் உடைத்து, வழிபடுவதற்கு அனுமதிக்க முடியாது என்று மறுத்த கோயில் நிர்வாகத்தினர், சமுதாயத்திற்கான உரிமை வரி வாங்க இயலாது என்றும் ஆடுகள் பலியிட்டு பூசை நடத்தும் நிகழ்ச்சியில் சடங்குகள் செய்யாமல் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்றும் கூறியதாக கூறப்படுகிறது.
ஆனால் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், காதல் திருமணம் செய்ததற்காக யாரையும் கோயிலில் வழிபாடு செய்வதற்கு அனுமதி மறுக்கக்கூடாது. அனைவரும் கோயிலில் வழிபாடு நடத்தவும் சுதந்திரமாக இருக்கவும் ஜனநாயக நாட்டில் உரிமை உண்டு என அறிவுரை கூறியிருக்கிறார். அப்போதுகோயில் தரப்பினர் தாங்கள் ஆலோசித்து முடிவு சொல்வதாக கூறி காவல் நிலையத்திலிருந்து சென்றனர்.
இந்நிலையில் கோயிலில் தொடர்ந்து நடைபெற வேண்டிய பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. வேறு சமுதாய பெண்களை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் வழிபட எதிர்ப்பு தெரிவித்து ஒரு சமுதாயத்தினர் கோயில் விழாக்களை ரத்து செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications