11 ஆம் வகுப்பு மாணவனை திருமணம் செய்த ஆசிரியை... போக்சோ சட்டத்தில் கைது செய்த திருச்சி போலீஸ்
திருச்சி: துறையூர் அருகே 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் தலைமறைவாகி பெரிய கோயிலில் திருமணம் செய்த ஆசிரியை மீது திருச்சி துறையூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
துறையூரை அடுத்துள்ள தனியார் பள்ளியில் சிக்கத்தம்பூர் பகுதியை சேர்ந்த ஷர்மிளா என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்து உள்ளார்.
இவரும் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

காணாமல் போன மாணவன்
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இவர் பள்ளி மாணவனுடன் திடீரென மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மாணவனின் பெற்றோர் துறையூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். தன்னுடைய மகனை கண்டுபிடித்துத் தருமாறு வேண்டுகோள் விடுத்த அவர்கள், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை சர்மிளா மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

செல்போன் மூலம் கண்டுபிடித்த போலீசார்
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆசிரியை பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து போலீசார் சோதனை செய்த போது, காணாமல்போன மாணவன் திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருப்பது தெரிய வந்தது.

பெரியகோயிலில் திருமணம்
அங்கு விரைந்த துறையூர் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் இருவரையும் துறையூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆசிரியையும் மாணவனும் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டதும், அதன் பின்னர் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஆசிரியை சர்மிளாவின் தோழி வீட்டில் தங்கி இருந்ததாகவும் தெரிவித்தனர்.

போக்சோ சட்டத்தில் கைது
பள்ளி மாணவர் 18 வயதுக்கும் குறைவானவர் என்ற காரணத்தால் ஆசிரியை சர்மிளா மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியை சர்மிளா, பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவன் திருச்சியில் உள்ள காப்பகத்தில் அடைக்கப்பட்டார். பள்ளி ஆசிரியை தன்னிடம் படித்த மாணவனையே திருமணம் செய்த சம்பவம் துறையூர் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications