4 கி.மீ. தூரத்தை கடக்க 4 மணி நேரம்! திருச்சி மரக்கடை வந்தடைந்த விஜய்! காலை வைத்ததுமே பவர் கட்!
திருச்சி: திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள தவெக தலைவர் விஜய்க்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்த நிலையில் 4 மணி நேரம் பயணத்திற்கு பிறகு தற்போது திருச்சி மரக்கடைக்கு தற்போது வந்தடைந்தார். அவர் காந்தி மார்க்கெட் எம்ஜிஆர் சிலை முன்பு பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மரக்கடை பகுதிகளில் கட்டடங்கள் மேல் ரசிகர்கள் தொங்கி கொண்டிருப்பதால் மரக்கடை பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தவெக விஜய் தனது முதல் பிரச்சார பயணத்தை திருப்புமுனையை ஏற்படுத்தும் திருச்சியில் இருந்து தொடங்குகிறார். திருச்சி மரக்கடை அருகே எம்ஜிஆர் சிலைக்கு பக்கத்தில் விஜய் பேசுவதற்கு சரியாக அரை மணி நேரம் மட்டுமே காவல் துறை வழங்கியது.

அதாவது 10.30 மணி முதல் 11 மணி வரை மட்டுமே பேச அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் கொடுத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் இந்த கட்டுப்பாடுகள். இந்த பிரச்சாரத்திற்காக அவருக்கு தனி பிரத்யேக பிரச்சார வேனும் தயார் செய்யப்பட்டது. அதில் கேரவனில் இருக்கும் அனைத்து வசதிகளும் இருக்கும்.
பிரச்சாரம்
இந்த பிரச்சாரத்திற்காக அவர் சென்னையிலிருந்து இன்று காலை தனிவிமானம் மூலம் புறப்பட்டார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள் யாரும் வரக் கூடாது என்பதற்காக தடுப்புகள் போட்டும் அதைத்தாண்டி ஓடிவந்தனர். இதையடுத்து எப்படியோ விஜய் பிரச்சார வாகனத்தில் ஏறிவிட்டார். அவரது வாகனம் தொண்டர்கள் வெள்ளத்தில் ஊர்ந்து சென்றது. இதனால் அவரால் 15 நிமிடங்கள் பயண தூரம் கொண்ட மரக்கடைக்கு வர முடியுமா என சந்தேகம் எழுந்தது.
மரக்கடை பக்கம் வரவில்லை
இந்த நிலையில் அவருக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இதுவரை விஜய், மரக்கடை பக்கம் வரவில்லை. இவர் வரும் வழியெல்லாம் கூட்டம் அதிகமாகியுள்ளது. விமான நிலையத்தில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் வழியாக தலைமை தபால் நிலைய சிக்னல், மேலப்புதூர் சுரங்கப்பாதை வழியாக பாலக்கரை பிரபாத் ரவுண்டானா, பழைய மதுரை சாலையில் உள்ள மரக்கடைக்கு வந்து கொண்டிருந்தார். சுமார் 15 நிமிட தூரம், 4 கி.மீ. பயணத்தை 4 மணி நேரமாக பயணித்து தற்போது திருச்சி மரக்கடையை விஜய் வாகனம் வந்தடைந்துள்ளது.
ரசிகர்கள் கூட்டம்
காலை முதலே விஜய்யை பார்க்க தொண்டர்களும் ரசிகர்களும் பொதுமக்களும் கூடியுள்ளனர். இவர்களில் 10-க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம் ஏற்பட்டு அங்கிருந்து அவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். விஜய் வந்து கொண்டிருப்பதை அறிந்த பல தொண்டர்கள் திருச்சி மரக்கடைகளில் உள்ள பல்வேறு கட்டடங்களிலும், மரக்கிளைகளிலும் , செல்போன் டவர்களிலும் ஏறிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அசம்பாவிதம் நடப்பதை தடுக்க, அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பேச அனுமதி
விஜய்க்கு காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தொண்டர்கள் கூடியதால் அவரால் 10.30 மணிக்கு வர முடியாமல் பிற்பகல் 2.30 மணிக்குத்தான் மரக்கடைக்கே வந்துள்ளார். இன்னும் எம்ஜிஆர் சிலை அருகே செல்ல எத்தனை நிமிடங்கள் ஆகும் என தெரியவில்லை. அவர் பேசுவாரா இல்லையா என தெரியவில்லை. ஒரு வேளை 11 மணிக்கு மேல் தற்போது பேசினால் விஜய் மீது விதிமீறல் வழக்குத் தொடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அரியலூருக்கு எப்போது
விஜய் தனது பேச்சை முடித்துக் கொண்டு, காந்தி சந்தை, தர்பார் சாலை, பழைய பால் பண்ணை வழியாக அரியலூர் திரும்பும் அளவுக்கு இவரது திட்டம் வகுக்கப்பட்டது. அங்கு எப்போது பேசுவார், அவர் எப்போது ஓய்வெடுப்பார் என்றெல்லாம் தெரியவில்லை. இதே போல் கூட்டம் வாராவாரம் கூடினால் நிச்சயம் அது அந்த பகுதி மக்களுக்கு தொல்லையாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. இன்றே திருச்சியின் முக்கிய சாலைகள் எல்லாம் ஸ்தம்பித்துவிட்டன.












Click it and Unblock the Notifications