கூட்டுறவு வங்கியில் தங்க நகைகளை அடகு வைத்தவர்களுக்கு ட்விஸ்ட்.. திருச்சியில் நடந்த பெரிய சம்பவம்
திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் ஒரு கட்டிடத்தின் மாடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் (வங்கி) செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், தங்க நகைகளை அடகு வைத்துள்ளார்கள். இந்நிலையில் மர்மநபர்கள் லாக்கரை உடைக்க முயன்றும் முடியாததால் ரூ.10 கோடி மதிப்பிலான நகைகள் கூட்டுறவு வங்கியில் தப்பின. இதனால் அவர்கள் தடயங்களை அழிக்க மிளகாய் பொடி தூவிவிட்டு சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது
இன்றைக்கு மக்கள் பயிர் கடன் தள்ளுபடி கிடைக்கும்,நகைக்கடன் தள்ளுபடி கிடைக்கும் என்று பேராவலில் உள்ளார்கள். ஆனால் ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ இதுபற்றி பெரிய அளவில் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில் நிதி நிலைமை அந்த அளவிற்கு பலவீனமாக உள்ளது. இது ஒருபுறம் எனில் கூட்டுறவு வங்கிகளில் தங்க நகையை அடகு வைக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஏனெனில் எப்படியும் தள்ளுபடி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அதற்கும் வாய்ப்பு இல்லை என்றே சொல்கிறார்கள். இது தொடர்பான வதந்திகளும் விளக்கங்களும் அண்மை காலங்களில் அதிக அளவில் வந்துள்ளன. இப்படி கூட்டுறவு வங்கி தொடர்பான செய்திகளை தேர்தல் வரை மக்கள் அடிக்கடி பார்க்கும் நிலை உள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கூட்டுறவு வங்கியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் (வங்கி) ஒரு கட்டிடத்தின் மாடியில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் தங்களது தேவைகளுக்காக தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று செல்கிறார்கள். அவ்வாறு அடமானம் வைக்கப்பட்ட நகைகளை வங்கியில் உள்ள ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் (லாக்கர்) வங்கி நிர்வாகத்தினர் பூட்டி வைத்துவிடுவார்கள்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 3ம் தேதி மாலையில் பணி முடிந்ததும் வழக்கம்போல் வங்கி பணியாளர்கள் வங்கியை பூட்டி சென்றுள்ளார்கள். மார்ச் 4ம் தேதியான நேற்று காலையில் வங்கி பணியாளர் பர்வதராஜ் என்பவர் வங்கியை திறக்க வந்திருக்கிறார். அப்போது, வங்கியின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஆடிப்போனார். உடனடியாக அவர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், ஜீயபுரம் டிஎஸ்பி கதிரவன், மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது வங்கியில் உள்ள பொருட்கள் சிதறிக் கிடந்தன. அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தையும் போலீசார் கண்டனர். நகைகள் வைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு பெட்டகம், பணம் இருந்த பீரோவை மர்மநபர்கள் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. அதேநேரம் நகை லாக்கரை உடைக்க முடியாததால் அப்படியே போட்டுவிட்டு சென்றது போலீசாருக்கு விசாரணையில் தெரியவந்தது.
இதனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்த சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் மற்றொரு பீரோவில் இருந்த ரூ.8 லட்சம் ரொக்கப்பணம் தப்பின. மேலும் மர்மநபர்கள் தாங்கள் சிக்கி விடக்கூடாது என்பதற்காக கண்காணிப்பு கேமராக்களின் ஹார்டு டிஸ்க்கை எடுத்து சென்றுவிட்டார்கள். தடயங்களை மறைக்கும் வகையில் வங்கி அலுவலகத்தில் இருந்து பிரதான சாலை வரை மிளகாய் பொடியையும் தூவி சென்றுள்ளனர். இந்த கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications