பாஜக சவுதாமணி மீது திமுக புகார் என்ன? எப்ஐஆர்-ஐ பார்த்த உடன் ஜாமீனில் நீதிபதி விடுவித்தது ஏன்?
திருச்சி: பாஜக பிரமுகர் சவுதாமணி மீது திமுக ஐடி விங்க் நிர்வாகிகள் கொடுத்த புகார் என்ன? முதல் தகவல் அறிக்கையை பார்த்த பின் ஜாமீனில் நீதிபதி விடுவித்தது ஏன்? என்பதை இப்போது பார்ப்போம்..
பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், ஊடகப்பிரிவு மாநில செயலாளராகவும் இருப்பவர் சவுதாமணி (48 வயது). இவர் முன்பு தொலைக்காட்சிகளில் செய்திவாசிப்பாளராக இருந்தவர்.. கடந்த 2017ல் பாஜகவில் இணைந்தார். இவர் மீது திருச்சி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் அளித்தனர்

அந்த புகாரில் திமுக ஐடி விங்க் நிர்வாகிகள் கூறுகையில், "கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி சவுதாமணி என்பவர் அவரது 'எக்ஸ்' (டுவிட்டர்) தள பக்கத்தில் திராவிட மாடல் ஆட்சியில் வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை சிதைக்கும் கொடுமை தானே நடக்கிறது என பதிவிட்டு, அதனுடன் ஒரு வீடியோவையும் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் 15 வயது மதிக்கத்தக்க 3 பள்ளி மாணவிகள் சீருடையுடன் கையில் பாட்டிலில் மதுபோன்ற பானத்தை வைத்து குடிப்பது போன்ற காட்சிகள் இருந்துள்ளது.
அந்த வீடியோவை பார்க்கும்போது, யாரோ மேற்படி திரவத்தை கொடுத்து குடிக்க சொல்லி வீடியோ எடுத்து, அந்த பதிவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது தெரிகிறது. இவ்வாறாக சமுதாயத்தை சீர்கெடுக்கும் விதமாகவும், அரசுக்கும், அரசு பள்ளிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடும், பொதுஅமைதியை கெடுக்கும் வகையில் ஏதோ உள்நோக்கத்துடன் மேற்படி வீடியோவை பரப்பிய சவுதாமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் ஐடி விங்க் நிர்வாகிகள் கூறியிருந்தனர்.
இந்த புகார் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணைக்கு பின்னர் பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், ஊடகப்பிரிவு மாநில செயலாளராகவும் உள்ள சவுதாமணி மீது சமூகவலைதளத்தில் வதந்தி பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சென்னையில் வைத்து கைது செய்த போலீசார், நேற்று காலை திருச்சிக்கு அழைத்து வந்தனர்.
விசாரணைக்கு பின்னர் நேற்று மாலை திருச்சி மாஜிஸ்திரேட்டு நீதிமன்ற நீதிபதி பாலாஜி முன்னிலையில் சவுதாமணியை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது முதல் தகவல் அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி, சவுதாமணி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்ததுடன், அவரை நீதிமன்ற காவலுக்கு (சிறைக்கு) அனுப்ப மறுத்து, சவுதாமணிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி அவரை உடனடியாக விடுவித்தார். இதையடுத்து சவுதாமணி சிறைக்கு செல்லாமல் வீடு திரும்பினார்.












Click it and Unblock the Notifications