குலுங்குது திருச்சி.. அதிருது அதிமுக.. அவர் "இங்கே" வரப்போறாரா.. இது எப்போ? எடப்பாடிக்கு சிக்கல்?
திருச்சி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில், திருச்சியில் இன்று முப்பெுரும் விழா நடக்கிறது.. இந்த மாநாடு, 2 விதமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட நிலையிலும்கூட, எப்போதும் போலவே, "ஒருங்கிணைப்பாளர் " என்றே தன்னுடைய லெட்டர்பேடில் ஓபிஎஸ் பயன்படுத்தி அறிக்கையை வெளியிட்டு வருகிறார்.
காரில் கொடி: அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி தரப்பில் தொடர்ந்து வார்னிங் தரப்பட்டு வரும்நிலையில், தன்னுடைய காரில்கூட, அதிமுக கொடியை பறக்கவிட்டபடியே உள்ளதாக கூறப்படுகிறது. இன்று நடக்கும் திருச்சி மாநாட்டில் அதிமுகவின் அங்கீகரிக்கப்பட்ட கொடியை பன்னீர்செல்வம் அணியினர் பயன்படுத்தாமல் தவிர்த்துள்ளதாகவும் சொல்லப்பட்டது.. மாநாடு நடக்கவுள்ள மைதானத்தை சுற்றி கொடிகள் நடப்பட்டுள்ளன...

கருப்பு & சிவப்பு : அந்த கொடிகள் கருப்பு, சிவப்பு நிறத்தில் உள்ளது.. இந்த கொடிகளுக்கு நடுவே மறைந்த முதல்வர் அண்ணாதுரை, இரட்டை இலை சின்னம் மேலே உள்ளது போல் இருக்கிறது.. இது அதிமுகவை ஞாபகப்படுத்தும் கொடி என்றாலும், தேர்தல் கமிஷனால் அதிமுகவுக்கு அங்கீகரிக்கப்பட்ட கொடி இல்லை.. அதாவது, இந்த கொடியை பார்க்க அதிமுகவே போலவே இருக்கும்.. ஆனால், அதிமுக கொடி கிடையாது. அதிமுக கொடி போல தோற்றம் மட்டுமே தரக்கூடியதாம்.
இந்த திருச்சி மாநாட்டைத்தான் தன்னுடைய நகர்வில் புதிய அத்தியாயம் என்று ஓபிஎஸ் கருதுகிறார்.. இந்த திருச்சி மாநாட்டைத்தான், தன்னுடைய மொத்த பலத்தை நிரூபிக்க காட்டும் களமாக ஓபிஎஸ் கருதுகிறார்.. இந்த திருச்சி மாநாட்டைத்தான், பாஜகவின் நம்பிக்கையை பெற்றுத்தரும் அடித்தளமாக ஓபிஎஸ் கருதுகிறார்.. இப்படி பல கணக்குகளை போட்டு ஓபிஎஸ், மும்முரத்தில் இறங்கிவரும்நிலையில்தான், எடப்பாடி தரப்பு ஓபிஎஸ்ஸூக்கு அழுத்தத்தை தர துவங்கி உள்ளது.

பண்ருட்டியார்: நேற்றைய தினம் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, எடப்பாடி தரப்பை கடுமையாக சாடியிருந்ததுடன், அதிமுக விதிமுறைகள் பற்றியும் தெளிவாக கூறியிருந்தார்.. குறிப்பாக, "அதிமுகவின் தலைமை அலுவலகம் ஜானகி அம்மையார் எம்ஜிஆருக்கு தந்தது.. அது எடப்பாடி பழனிச்சாமிக்கு சொந்தமானது அல்ல. கட்சி இயங்குவதற்கு தொண்டர்கள் முக்கியம், அதை வெற்றி பெற செய்ய மக்கள் ஆதரவு முக்கியம். அதிமுகவில் தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறதா, ஓபிஎஸ்க்கு இருக்கிறதா என்பதை மாநாட்டின் மூலம் தெரிந்து கொள்வீர்கள் என்றார்.
ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து இந்த மாநாட்டை நடத்தவில்லையாம்.. சமீபகாலமாகவே பாஜகவால் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக வருத்தத்தில் உள்ள நிலையில், மேலிடத்துக்கு தங்களை நிரூபிக்கவே மாநாட்டை நடத்துவதாக சொல்கிறார்கள்.. ஆனால் 5 லட்சம் பேர் வரை வரலாம் என்று ஓபிஎஸ் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த மாநாட்டின் வெற்றியை வைத்துதான், அடுத்தடுத்த மாநாடுகள், பொதுக்கூட்டங்களை நடத்த ஓபிஎஸ் தரப்பில் முடிவு செய்துள்ளார்களாம்.

தினகரன்: இந்த மாநாட்டில் சசிகலா மற்றும் தினகரனுக்கு அழைப்பு விடுக்கப் போவதாக கடந்த ஒரு மாத காலமாகவே சொல்லப்பட்டு வருகிறது.. அதற்கேற்றபடி, அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.. ஆனால், அவர்கள் 2 பேரும் மாநாட்டில் பங்கேற்பார்களா என்று தெரியவில்லை.. சசிகலா சில நாட்களுக்கு முன்பு தந்த பேட்டியில், "ஓபிஎஸ் சந்திக்க நேரம் கேட்டால் நிச்சயம் வழங்குவேன். மாநாட்டிற்கு அழைத்தால் அது குறித்து பிறகு முடிவெடுக்கப்படும்." என்றார்..
அதாவது, சசிகலாவுக்கு ஓபிஎஸ் மாநாட்டில் பங்கேற்க விருப்பம் உள்ளதாகவே தெரிகிறதாம்.. இதையடுத்து, சசிகலாவின் எண்ண ஓட்டங்களை அறிந்துள்ள ஓபிஎஸ், மாநாட்டில் பேச வேண்டிய விசயங்கள் குறித்து பண்ருட்டி ராமச்சந்திரனிடம் இதுகுறித்து விவாதித்திருக்கிறார்.. சசிகலாவும் தினகரனும் மாநாட்டில் கலந்து கொண்டால், முக்குலத்தோர் கட்சியாக விமர்சனம் வரும். அதுவும், ஜெயக்குமாரை வைத்து சாதி ரீதியாக விமர்சிக்க வைப்பார் எடப்பாடி பழனிசாமி.. அதனால், சீர்தூக்கி பார்த்து சசிகலா, தினகரனை அழைப்பது குறித்து முடிவெடுங்கள்" என்று ஆலோசனை வழங்கியிருந்தாராம் பண்ருட்டி ராமச்சந்திரன்..
அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் மாநாட்டில் கலந்துகொண்டால் சாதி முத்திரை குத்தப்பட்டுவிடும் என்பதால், டிடிவி தினகரனும் இந்த மாநாட்டை தவிர்க்கக்கூடும் என்றும் செய்திகள் வலம்வந்தன.. இப்படி ஒரு குழப்பத்துக்கு நடுவில்தான் இன்றைய தினம் மாநாடு நடக்கிறது.. இருவருக்குமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டு வரும்நிலையில், சசிகலா தினகரன் இருவரும் திருச்சிக்கு வருவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

இதனிடையே, 5 ஆயிரம் பேர் வரை வரலாம் என்று எதிர்பார்ப்பதாக, ஓபிஎஸ் தரப்பில் நேற்றில் இருந்து சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், இப்போதுவரை எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் இல்லாததால் விழா நடைபெறும் இடம் வெறிச்சோடி காணப்படுகிறதாம்.. ஒருவேளை மாலையில் இந்த கூட்டம் அதிகரிக்கலாம் என்றும் தெரிகிறது.. இதற்கு நடுவில், மாநாடு குறித்து பெரியகுளத்தில் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்-ஐ கும்பிடுவது போன்று வைக்கப்பட்ட பேனரை அகற்ற போலீசாரிடம் புகார் கொண்டு போனார்கள் எடப்பாடியின் ஆதரவாளர்கள்..
எதிர்பார்ப்பு: மாநாட்டு மேடைக்கு மாலை 6 மணிக்கு முன்னால் ஓபிஎஸ் வருகை தருகிறார்... இரவு 7.30 மணிக்கு மேல் மாநாட்டு பேருரை ஆற்றுகிறார். அப்போது சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக போகிறதாம்.. குறிப்பாக, இந்த மாநாட்டின் தொடர்ச்சியாக வட மாவட்டத்திலும், சென்னையிலும் அடுத்தடுத்து மாநாடு நடத்த முடிவு செய்திருப்பதாகவும், அது தொடர்பான அறிவிப்புகளும் இன்று மாலை வெளியிடப்படலாம் என்கிறார்கள்.. அதேசமயம், இந்த மாநாட்டின் முடிவில், ஓபிஎஸ்ஸூக்கான நிஜபலமும் தெரிந்துவிடும் என்பதால், தமிழக அரசியலின் மொத்த கவனமும் திருச்சியில் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications