13 ஆயிரத்துக்கு 19 ஆயிரம்.. பேரமே பேசல! தூத்துக்குடி ஆட்டு சந்தையில் சிக்கிய கும்பல்.. என்ன நடந்தது?
தூத்துக்குடி: எட்டையபுரம் ஆட்டுச்சந்தையில் பேரமே பேசாமல் 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆட்டை 19 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கும்பல் வாங்கியுள்ளது. இதனால் ஆட்டை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிக்கு சந்தேகம் வரவே அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார். விசாரணையில், அவை கள்ள நோட்டுக்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஆறு பேரையும் போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.
தமிழகம் முழுக்க பல்வேறு ஊர்களில் ஆட்டுச்சந்தைகள் உள்ளன. பண்டிகை, விசேஷ நாட்களில் இந்த ஆட்டுச்சந்தைகளில் விற்பனை களை கட்டும். அந்த வகையில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ் பெற்ற சந்தையாக எட்டையபுரம் ஆட்டுச்சந்தை உள்ளது. இந்த ஆட்டுச்சந்தை சனிக்கிழமை தோறும் கூடும்.

களை கட்டிய ஆட்டுச் சந்தை
இந்த சந்தைக்கு தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம், தேனி, மதுரை, என பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருவதை காண முடியும். சனிக்கிழமை சந்தை கூடும் என்றாலும் முந்தைய நாளே வியாபாரிகள், விவாசயிகள் அங்கு வருவதை காண முடியும். அந்த வகையில் நேற்று அதிகாலையிலேயே சந்தை களை கட்டியிருந்தது. அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த பொன்வேலன் என்ற விவசாயி ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தார்.
கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள்
அவரிடம் இருந்து ஒரு கும்பல் 2 வெள்ளாடுகளை விலைக்கு தருமாறு கேட்டது. பொதுவாகவே ஆடுகளை வாங்க வருபவர்கள் விலையை முடிந்த அளவு குறைத்து பேரம் பேசுவது வழக்கம். ஆனால், விவசாயி பொன்வேலனிடம் வெள்ளாடுகளை வாங்கிய கும்பல் ஒரு ரூபாய் கூட குறைத்து தருமாறு கேட்கவில்லை. அது மட்டும் இன்றி கேட்ட பணத்தை உடனே புது 500 ரூபாய் தாளாக எடுத்து கொடுத்தனர்.
13 அயிரம் மதிப்புள்ள ஆடுகளை 19 ஆயிரத்திற்கு வாங்கும் போதே பொன்வேலனுக்கு லேசாக டவுட் வந்தது. அடுத்ததாக புது நோட்டுகளை பார்த்ததும் அவருக்கு சந்தேகம் உறுதியானது. உடனே உஷாரான அவர் காவல் நிலையத்திற்கு புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்று பணத்தை வாங்கி பார்த்தனர். இதில் பணம் அனைத்தும் கள்ள ரூபாய் நோட்டு என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் எங்காவது நிற்கிறார்களா என கண்காணித்தனர்.
6 பேர் அதிரடி கைது
இதில், விருதுநகர் மாவட்டம் கோட்டைப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் சிக்கினார். அவரை பிடித்து விசாரித்ததில், சாத்தூர் பகுதியில் தங்கியிருந்த விஜயகரிசல்குளத்தை சேர்ந்த முனியன், சந்திரன் உள்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.54 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல இடங்களில் இப்படி கள்ள நோட்டுகளை மாற்றி வந்தது தெரியவந்தது.
6 பேரும் பட்டாசு ஆலைகளில் வேலை செய்து வருகிறார்கள். வேலை முடிந்த பிறகு இப்படி ஆடு, மாட்டு சந்தைகளுக்கு சென்று அவற்றை வாங்கி விற்பனை செய்து வந்தனர். சந்தையில் கூட்ட நெரிசல் இருக்கும் என்பதால் அதை சாதகமாக பயன்படுத்தி கள்ள நோட்டுக்களை மாற்ற இந்த கும்பல் நூதன முறையில் முயற்சித்து இருக்கிறது.
கள்ள நோட்டுகள் எப்படி கிடைத்தது
மேலும், மும்பையைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து இந்த கும்பல், மதுரையில் வைத்து கள்ளநோட்டுகளை வாங்கியதும், அவற்றை தமிழகம் முழுவதும் உள்ள ஆடு, மாட்டு சந்தைகளில் புழக்கத்தில் விட்டதும் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கோண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications